தமிழ்நாடு

சிறப்பு வாய்ந்த பெருக்க மரத்தைப் பற்றிய கல்வெட்டினை திறந்து வைத்தார் முதல்வர்

DIN

சிறப்பு வாய்ந்த தன்மைகளைக் கொண்ட பெருக்க  மரத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு, இம்மரத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கிய கல்வெட்டினை திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருக்க மரத்தின் சிறப்புகள் குறித்த கல்வெட்டு மற்றும் மக்களைத் தேடி மருத்துவ மையத்தை திறந்து வைத்து – காது கேளாதோர் வாரத்தையொட்டி உயர்தர செவித் திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24.9.2021) சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருக்க மரத்தை பார்வையிட்டு, அதன் சிறப்புகள் குறித்த கல்வெட்டினை திறந்து வைத்தார். 

மேலும், இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவ மையத்தை திறந்து வைத்து, காது கேளாதோர் வாரத்தையொட்டி மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 98.80 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர செவித் திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளையும், காது கேட்கும் திறன் குறைந்த முதியோர்களுக்கு புதிய காது கேட்கும் கருவிகளையும் வழங்கினார்.

சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெருக்க மரம், உலகின் பழமையான மரவகைகளில் ஒன்றாகும். இம்மரம் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சார்ந்தது. சுமார் 500 ஆண்டுகள் வரை நீண்ட ஆயுட்காலம் கொண்டது. இம்மரத்தின் இலைகள் வைட்டமின் “சி” சத்து நிறைந்தது. 37 அடி சுற்றளவு கொண்ட தண்டும், 65 அடி உயரமும் கொண்ட இந்த அரிய மரம் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையும் பாரம்பரியமும் மிக்க சென்னை மருத்துவக் கல்லூரியின் மகத்தான புராதானச் சின்னங்களில் ஒன்றாக மிளிர்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்மைகளைக் கொண்ட பெருக்க  மரத்தை தமிழக முதல்வர் இன்று பார்வையிட்டு, இம்மரத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கிய கல்வெட்டினை திறந்து வைத்தார்.

சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 15,000 புறநோயாளிகள், 3,800 உள்நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என சுமார் 25,000 நபர்கள் வந்து செல்கின்றனர். அவர்களில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர் இரத்த அழுத்த சாத்தியக் கூறு மதிப்பீடு செய்யவும், இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவ மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

உலக காது கேளாதோர் வாரம் இவ்வாண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாரத்தின் கடைசி நாளான செப்டம்பர் 26-ஆம் தேதி உலக காது கேளாதோர் நாளாக அமைந்துள்ளது. சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர், கிருஷ்ணகிரி மற்றும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றிற்கு 98.80 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர செவித் திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளையும் காது, மூக்கு, தொண்டை துறை தலைவர்களிடம் வழங்கினார்.

மேலும், காது கேட்கும் திறன் குறைந்த முதியோர்களுக்கு புதிய காது கேட்கும் கருவிகளை தமிழக முதல்வர்  வழங்கியதோடு, காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகளுக்கு முதன் முறையாக காது கேட்கும் திறனை வெளிப்படுத்தும் கருவியை செய்து, அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓராண்டு முறையான பயிற்சிக்குப் பின் பேசும் திறன் பெற்ற குழந்தைகளையும் வாழ்த்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT