தமிழ்நாடு

மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் போராட்டம்: குடும்பத்தோடு ஊழியர்கள் கைது

19th Sep 2021 02:52 PM

ADVERTISEMENT


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் குடும்பத்தோடு  போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து உளுந்துார்பேட்டை வரையிலான பகுதியில், வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி,  தலைவாசல் அடுத்த நத்தக்கரை, கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் ஆகிய 3 இடங்களில் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் பொறுப்பை, இரு மாதத்திற்கு முன் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஏற்றது.

ADVERTISEMENT

காவல் வாகனத்தில் ஏற்றப்படும்  போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் குடும்பத்தினர். 

இந்நிலையில், இந்த சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களிடம், புதிய பணி ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டுமென  நிர்பந்திப்பதாகக் கூறிய 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களிடையே வாழப்பாடி வட்டாட்சியர் வரதராஜன் தலைமையில், சனிக்கிழமை மாலை அமைதிக்குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துசாமி, காவல் ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் வருவாயத்துறை அலுவலர்கள் இருதரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.  நிலுவை ஊதியம் மற்றும் இதர தொகைகளை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே குடும்பத்தோடு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் குடும்பத்தினர். 

தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்த ஊழியர்கள் மற்றும் இவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களை வாழப்பாடிக்கு அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை போலீஸார் கைது செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Staff protest Employees arrested Mettupatti customs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT