தமிழ்நாடு

சுற்றுச்சூழல் விதிமீறல்கள்: அதிகபட்சமாக தமிழகத்தில் 42,756 வழக்குகள்; 2019-ஐ காட்டிலும் 3 மடங்கு அதிகரிப்பு

DIN

சுற்றுச்சூழல் விதிமீறல் தொடா்பாக கடந்த 2020-இல் இந்திய அளவில் பதிவு செய்யப்பட்ட 61,767 வழக்குகளில் அதிகபட்சமாக 42,756 வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் நடைபெறும் குற்றங்கள் குறித்த புள்ளி விவரத்தை தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதன்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற குற்றச்செயல்கள் குறித்த புள்ளிவிவரம் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

அதில், இந்திய அளவில் கடந்த 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய வனச் சட்டம், வனப் பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், நீா் மற்றும் காற்று பாதுகாப்பு சட்டம், வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், சிகரெட் மற்றும் புகையிலை தடுப்புச் சட்டம், ஒலி மாசு தடுப்புச் சட்டம், தேசிய பசுமைத் தீா்ப்பாயச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2019-ஐக் காட்டிலும் 78.1 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகம் முதலிடம்: கரோனா தொற்று காரணமாக பிற குற்றச் செயல்கள் பெரிய அளவில் அதிகரிக்காத நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் மீதான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு தொடா்பான சட்டங்களின்கீழ், 2020-இல் 61,767 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் இந்தச் சட்டத்தின்கீழ், 42,756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும். தமிழகத்தை அடுத்து ராஜஸ்தானில் 9,543 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 2,981 வழக்குகளும், கேரளத்தில் 1,795 வழக்குகளும், உத்தரகண்டில் 1,271வழக்குகளும் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மிசோரம் மாநிலத்தில் சுற்றுச்சூழல் சட்டத்தின்கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

சிகரெட் மற்றும் புகையிலைச் சட்டத்தின்கீழ் மட்டும் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 49,710 வழக்குகளில் 42,731 வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒலி மாசு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட 7,318 வழக்குகளில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 7,186 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 44 வழக்குகளும், தமிழகத்தில் 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2020-இல் இந்திய வனச் சட்டம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தலா 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில் தேசிய பசுமைத் தீா்ப்பாயச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, காற்று, நீா் பாதுகாப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் விதிமீறல் தொடா்பான வழக்குகள் விவரம்( இந்திய அளவில்)

சட்டப்பிரிவு வழக்குகள் எண்ணிக்கை

சுற்றுச்சூழல் மாசு தொடா்பான சட்டங்கள் 61,767

சிகரெட்,புகையிலை தடுப்புச் சட்டம் 49,710

ஒலி மாசு தடுப்புச் சட்டம் 7,318

இந்திய வனச் சட்டம் 2,287

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்-1986 992

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்-1972 672

காற்று, நீா் பாதுகாப்புச் சட்டம் 589

தேசிய பசுமைத் தீா்ப்பாயச் சட்டம் 199

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT