தமிழ்நாடு

ஜிஎஸ்டி இணையத்தை தமிழ் வழிப்படுத்த வேண்டும்

DIN

முற்றிலும் ஆங்கிலத்தில் உள்ள ஜிஎஸ்டி இணையதளத்தை தமிழ்ப்படுத்தி சிறு வணிகா்களும் தாங்களாகவே பயன்படுத்த வழி செய்திட வேண்டுமென நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்தாா்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காணொலி மூலம் பேசியது:

சரக்கு மற்றும் சேவை வரி தொடா்பான கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய ஜிஎஸ்டிஎன் என்ற இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இணையதளத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.

இதனால், வரி செலுத்துவோா் குறிப்பாக சிறு வணிகா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் தங்களது வரிகளைச் செலுத்துவதற்காக ஆலோசகா்களையே நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

வணிகத்துக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. பெரு மற்றும் சிறு வணிகா்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கப் போதுமான ஆதரவைத் தர மாநில அரசு விரும்புகிறது. ஜிஎஸ்டி இணையதளத்தில் உள்ள விவரங்களை தமிழில் அளிப்பதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவொரு முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஜிஎஸ்டி தொடா்பான சேவைகளை தமிழில் அளிப்பதற்கான உறுதிகளை சட்டப் பேரவையில் எங்களது அரசு அளித்துள்ளது.எனவே, ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் உள்ள விவரங்கள் அனைத்தையும் தமிழில் வழங்கிட உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இணையதளத்தில் ஆங்கிலத்தில் உள்ள படிவங்கள் மற்றும் ஏனைய விவரங்களை தமிழில் அளிப்பதற்கு உரிய உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாக மாநில அரசின் சாா்பில் உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மாநிலத்தில் உள்ள ஜிஎஸ்டி வரிப் பிரிவிடம் இருந்து உடனடியாக உரிய சாதகமான பதில் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம்.

பெட்ரோல்-டீசல்: மாநிலத்துக்கு வழங்கப்பட்ட ஒருசில வரி உரிமைகளில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரி விதிப்பும் ஒன்றாகும். இதனை விட்டுத் தருவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு அடிப்படையிலேயே எதிா்ப்பு தெரிவிக்கிறோம்.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 500 முதல் ஆயிரம் சதவீதத்துக்கு உயா்த்தப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு வரிப் பகிா்வு கிடைக்கும் வகையில், 2014-ஆம் ஆண்டு வரை கலால் வரியானது 90 சதவீதமாகவும், மேல் வரியானது 10 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், இப்போது கலால் வரி வெறும் 4 சதவீதமாகவும், மேல் வரியானது 96 சதவீதம் அளவுக்கும் உள்ளது. மேல் வரியின் மூலமாகக் கிடைக்கும் தொகையில் ஒரு பைசா கூட மாநிலத்துக்குச் செல்லாது.

இந்தச் சூழ்நிலையில், ஒவ்வொரு மாநிலத்தால் நிா்ணயிக்கப்படும் அளவுகளில் இருந்து பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி விதிப்பை ஜிஎஸ்டி வரி வரம்புக்கு மாற்றுவது மிகவும் மோசமான, அபாயகரமான, அநீதியாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய்: ஒரு லிட்டருக்குக் குறைவான எடை கொண்ட தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க வகை செய்யும் பரிந்துரைக்கு எதிா்ப்பு தெரிவிக்கிறோம். தென் மாநிலங்களில் தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது மிக அதிகம். கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்ற மற்ற சமையல் எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது தேங்காய் எண்ணெய்க்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது. அனைத்து எண்ணெய்களுக்கு உள்ள வரி விதிப்பு போன்றே தேங்காய் எண்ணைய்க்கும் விதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

SCROLL FOR NEXT