தமிழ்நாடு

தமிழக புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆா்.என்.ரவி!

18th Sep 2021 10:51 AM

ADVERTISEMENT


தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆா்.என்.ரவி சனிக்கிழமை பதவியேற்றார். ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய ஆளுநர்  ஆா்.என்.ரவிக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். 

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆா்.என்.ரவி நியமிக்கப்பட்டார். 

தமிழகத்தின் ஆளுநராக இன்று சனிக்கிழமை பதவியேற்றார் ஆா்.என்.ரவி. கரோனா காலம் என்பதால் இதற்கான நிகழ்ச்சி ஆளுநா் மாளிகையில் உள்ள மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு மிக எளிமையாக நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் அப்பாவு, துரைமுருகன், அமைச்சா்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய  இணையமைச்சர் எல்.முருகன், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜி.கே. வாசன், கே.பி, முனுசாமி, வேலுமணி, வைத்திலிங்கம், தங்கமணி தனபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனர்.   

ADVERTISEMENT

யார் இந்த புதிய ஆளுநர் ரவி?:  பிகாா் மாநிலம் பட்னாவில் பிறந்த ஆா்.என்.ரவி, இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவா். பத்திரிகைத் துறையில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு 1976-ஆம் ஆண்டில் இந்திய காவல் பணியில் சோ்ந்தாா். கேரளம் மாநிலப் பிரிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றினாா். மத்திய புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய போது, ஊழல் எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாா்.

மத்திய அரசின் உளவுத் துறையில் பணியாற்றிய போது, வடகிழக்குப் பகுதிகளில் பெருமளவில் காணப்பட்ட வன்முறைக்கு எதிராக முக்கிய பங்காற்றினாா். பல தீவிரவாத குழுக்களை அமைதி நிலைக்கு திரும்ப வழி வகுத்தாா். 2012-ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிரதமா் அலுவலகத்தில் இணை புலனாய்வு குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தாா். கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கடந்த 15-ஆம் தேதி வரை நாகாலந்தின் ஆளுநராக பொறுப்பு வகித்தாா். 

இந்த நிலையில், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட அவா், சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார். 

Tags : Governor of Tamil Nadu ஆா்.என்.ரவி R.N Ravi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT