தமிழ்நாடு

தமிழகத்தின் தியாக தீபங்கள் - 28: கு.காமராஜர்

த. ஸ்டாலின் குணசேகரன்


காமராஜரின் கல்விப் பயணம் ஆறாம் வகுப்பைத் தாண்டவில்லை. விடுதலை உணர்வை மேம்படச் செய்யும் இதழ்களையும், புத்தகங்களையும் தீவிரமாக வாசிக்கும் பழக்கம் இளம் வயதிலேயே ஏற்பட்டது.

தேசியத் தலைவர்களின் உரை கேட்கும் ஆர்வமும் மிகுதியாகவே இருந்தது. ஜாலியன்வாலா பாக் சம்பவம் காமராஜருக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. அதன்பிறகு நேரடி அரசியலில்  தீவிரமானார். கதராடை அணிந்தார்.

1921-இல் வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணிக்கும் விதத்தில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். 1921 செப்டம்பரில் காந்தியடிகள் மதுரைக்கு வந்தபோது நண்பர்களுடன் சென்று இரண்டு நாள்கள் தங்கியிருந்து காந்தியடிகளின் உரைகளைக் கேட்டார்.

பல ஊர்களுக்குச் சென்று கூட்டங்களில் பேசினார். அலங்காரமான சொற்பொழிவுபோல இல்லாவிடினும் இதயத்தைத் தொடக்கூடிய உரையாடலைப்போல அவரது மேடைப் பேச்சு உயிர்ப்புடன் இருந்தது. 1927-இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தொண்டர் படைத் தலைவராகப் பங்கேற்றார். 1931-இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1930-இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக ஓராண்டு, 1932-இல் காந்தியடிகளின் கைதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஓராண்டு, கவர்னரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக 15 நாள்கள், 1933-இல் காவல் நிலையத்தின் மீது குண்டு வீசியதாகப் போடப்பட்ட பொய் வழக்கில் எட்டு மாதங்கள், வைஸ்ராய் வருகையின்போது முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக 15 நாள்கள், 1940-இல் ஆளுநர் ஹோப்பிற்கு எதிராகப் பிரசாரம் செய்ததற்காக ஓராண்டு, 1942-இல் ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றதற்காக மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். விதிக்கப்பட்ட தண்டனை இதைவிட அதிகம். கழிந்த காலம் போக மொத்தம் ஆறே முக்கால் ஆண்டுகள் சிறையிலிருந்துள்ளார். 

1942-இல் சிறையிலிருந்தபோதே விருதுநகர் நகரசபைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தலைவரான பிறகு ஒன்பது மாதங்கள் கழித்துத்தான் விடுதலையானார். வெளியே வந்தவுடன் பதவியை ராஜிநாமா  செய்தார்.

1936-இல் தீரர் சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவரானபோது காமராஜரை செயலாளராகத் தேர்வு செய்தார். சத்தியமூர்த்தியைத் தனது அரசியல் நெறியாளராக இறுதிவரை ஏற்றிருந்தார். 1940-இல் மாகாண காங்கிரஸ் தலைவரானார். சத்தியமூர்த்தியே அவரை முன்மொழிந்தார். சத்தியமூர்த்தி செயலாளரானார்.

1942, 1944, 1946, 1948, 1950 ஆகிய ஆண்டுகளில் மாகாணத் தலைவராகத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டார். 1946-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

விடுதலைக்குப் பிறகு காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட மிக முக்கிய பொறுப்புகளிலிருந்து தனித்த முத்திரை பதித்தார். மக்களுக்குள் இருந்து முகிழ்த்த வலிமையான தலைவர் காமராஜர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

SCROLL FOR NEXT