தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: ஆற்றோரங்களில் வசித்த 46 பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கல்

7th Sep 2021 04:40 PM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் ஆற்றோரங்களில் வசித்த 46 குடும்பங்களுக்கான இட ஒதுக்கீட்டை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.

தமிழக அரசு பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரத்துறை ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணார் உப வடி நிலத்தை தட்ப வெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், மீள் குடியேற்றப் பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் கூட்டம் நடைபெற்றது.

கூத்தாநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஓய்வு பெற்ற துணை ஆட்சியரும், மீள் குடியேற்ற அலுவலருமான எஸ்.வைத்தியநாதன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் என்.கவிதா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், திருவிடை வாசல், புனவாசல் மற்றும் பள்ளிவர்த்தி உள்ளிட்ட 3 இடங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 46 பேருக்கு, குலுக்கல் முறையில் அவர்களுக்குரிய வீடுகளுக்கான இடங்களை, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் டி.அழகர்சாமி வழங்கினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, ஒய்வு பெற்ற துணை ஆட்சியரும், மீள் குடியேற்ற அலுவலருமான வைத்தியநாதன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து ரூ. 980 கோடி கடனில், கடப்பாறு, வெண்ணாறு, பாண்டவையாறு, வளவனாறு, அரிச்சந்திரா நதி, வேதாரண்யம் காட்டாறுக் கால்வாய் உள்ளிட்ட 6 ஆறுகளையும் தூர்வாரி, அதன் கரைகளை உயர்த்தி சீரமைக்கப்பட உள்ளது. 

தேவையான இடங்களில் நீர் ஒழுகிகள் அமைக்கப்படும். இதில், கரைகளில் ஆக்கிரமிப்பில் இருக்கக் கூடியவர்களை அகற்றி, அவர்களின் குறைந்தபட்சம் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் பாதுகாப்பு கொள்கைப்படி விரும்பும் இழப்பீடு, அரசு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் பெற்று, அதில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். ஆக்கிரமிப்பில் இருந்தவர்களை அப்புறப்படுத்தி, அந்த இடம் சீரமைக்கப்படும். இந்தத் திட்டத்தின் நோக்கம் இதுதான். இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அதைத் தடுக்கும் விதமாகவும், கடல் நீர் உள்ளே புகுந்து விடாதவாறு தடுப்பதற்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இழப்பீடாகக் கேட்பவர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரத் தொகை வழங்கப்படும். இன்று வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ள 46 பயனாளிகளும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே தேர்வு செய்யப்பட்டுள்ளன. குலுக்கல் முறையில் அவர்களுக்குரிய இடத்தைத்தான் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது என்றார். கூட்டத்தில், உதவி செயற் பொறியாளர்கள் ஆர்.சீனிவாசன், எம்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT