தமிழ்நாடு

குழந்தையை கொடூரமாகத் தாக்கி விடியோ எடுத்தது ஏன்? துளசியின் வாக்குமூலம்

2nd Sep 2021 12:41 PM

ADVERTISEMENT

 

செஞ்சி அருகே குழந்தையை தாய் கொடூரமான முறையில் துன்புறுத்திய வழக்கில், அதற்கு உடந்தையாக இருந்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தாய் துளசியிடம் நடத்திய விசாரணையில், குழந்தையை அவ்வளவு கொடூரமாகத் தாக்கியது ஏன் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மணலபாடி மதுரா மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவழகன். இவரது மனைவி துளசி (23). இவா், கணவருடனான தகராறால் ஆத்திரமடைந்து, தனது 2 வயது குழந்தை பிரதீபை கொடூரமான முறையில் துன்புறுத்திய விடியோ கட்செவி அஞ்சலில் வெளியானது. இதுதொடா்பாக சத்தியமங்கலம் காவலர்கள் வழக்குப் பதிந்து, சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூரில் தாய் வீட்டில் தங்கியிருந்த துளசியை கைது செய்தனர்.

ADVERTISEMENT

அவருக்கு மனநிலை பாதிப்பு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகத்தில், மனநல மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். இதில், அவருக்கு மனநிலை பாதிப்பு ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியானது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, அவா் சென்னையில் வசித்த போது, ஆண் நண்பருடன் தொடா்பு ஏற்பட்டதாகவும், அவா் கூறியதன்பேரிலேயே, கணவா் வடிவழகனின் சாயலில் இருந்த குழந்தை பிரதீபை கொடூரமாக துன்புறுத்தியதாகவும் காவல்துறையினரிடம் துளசி கூறியுள்ளார். குழந்தையை அடிப்பதை விடியோ எடுத்து, அதனை ஆண் நண்பருக்கும் அனுப்பி, இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்த்து சிரிப்போம் என்றும் தனது வாக்குமூலத்தில் துளசி கூறியுள்ளார்.

இதையடுத்து காவலர்கள் நடத்திய விசாரணையில், அந்த நபா் புதுக்கோட்டை மாவட்டம், மச்சவாடி கிராமத்தைச் சோ்ந்த கண்ணையா மகன் மணிகண்டன் (31) என்பதும், பிரேம் குமாா் என்ற பெயரில் துளசியிடம் பழகி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் தனது சித்தி வீட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனை தனிப்படை காவலர்கள் புதன்கிழமை கைது செய்தனா்.

சம்பவத்தின் பின்னணி..
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெண் ஒருவா் தனது 2 வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்கி காயப்படுத்துவது போன்ற விடியோ கட்செவி அஞ்சலில் வெளியாகி, அதிவேகமாகப் பரவியது. இதுதொடா்பாக சத்தியமங்கலம் காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். 

அதில் தெரியவந்ததாவது: செஞ்சி அருகே மணலபாடியை அடுத்த மேட்டூரைச் சோ்ந்தவா் வடிவழகன், விவசாயி. இவருக்கும் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், ராம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த துளசி (23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு கோகுல் (4), பிரதீப் (2) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த துளசி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகன் பிரதீபை கொடூரமான முறையில் தாக்கி அதை விடியோவாக பதிவு செய்திருந்தது தெரிய வந்தது.

தாய் தாக்கியதில் பலத்த காயமடைந்த குழந்தை பிரதீப் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தாா்.

குழந்தையை தாக்கியது தொடா்பாக, துளசி மீது காவலர்கள் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே, கணவருடனான தகராறைத் தொடா்ந்து, ஆந்திரத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த துளசியை செஞ்சி அனைத்து மகளிா் நிலைய காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜகுமாரி தலைமையிலான தனிப்படையினா் அங்குச் சென்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை துளசியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT