தமிழ்நாடு

மானாமதுரையில் அமமுக வழக்குரைஞர் பிரிவு நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

2nd Sep 2021 02:20 PM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை பட்டப்பகலில் தனது அலுவலகத்தில் இருந்த அமமுக வழக்குரைஞர் பிரிவு மாநில நிர்வாகியை கும்பலாக வந்த நான்கு பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மானாமதுரை அருகே ராஜ கம்பீரத்தை சேர்ந்தவர் குரு.முருகானந்தம். வழக்குரைஞரான இவர் மானாமதுரை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார். மேலும் அமமுக மாநில வழக்குரைஞர் பிரிவு நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 

இந்நிலையில், மானாமதுரை சி.எஸ்.ஐ வளாகம் எதிரே சிவகங்கை சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் குரு. முருகானந்தம் தனது தொழில் சார்ந்த கட்சிக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் அரிவாள்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்து குரு. முருகானந்தத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தாங்கள் வந்த வாகனத்திலேயே தப்பிச் சென்றனர்.

ADVERTISEMENT

இச்சம்பவத்தில் முருகானந்தத்திற்கு  தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது.  முருகானந்தம் தப்பிக்க முயன்றும் அக்கும்பல் அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்து அவரை வெட்டியது.

மானாமதுரையில் அரிவாளால் வெட்டப்பட்ட குரு முருகானந்தத்தின் அலுவலகத்தில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி கிடக்கின்றன.

இச்சம்பவத்தின் போது அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அலுவலகத்திற்கு உள்ளே எங்கு பார்த்தாலும் ரத்தக்கறையாக இருந்தது.

இச் சம்பவத்தை பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் குரு. முருகானந்தத்தை சிகிச்சைக்காக மானாமதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு  அவருக்கு  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வழக்குரைஞர் முருகானந்தம் அரிவாளால் வெட்டப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இவரை வெட்டியவர்கள் யாரென்றும் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. 

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மானாமதுரைக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு நேரடியாக விசாரணை நடத்தினார்.

மானாமதுரை போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து எதிரிகளை தேடி வருகின்றனர்.

Tags : மானாமதுரை Sickle cut Manamudurai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT