தமிழ்நாடு

தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு: வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை

2nd Sep 2021 12:08 PM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டையில் உள்ள தனியார் மின் உற்பத்தி ஆலையின் விரிவாக்கமாக கட்டுமான இரும்பு கம்பிகள் தயாரிக்க தேவையான மூலப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டையில் தனியார் மின் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் விரிவாக்கமாக அப்பகுதியில் கட்டுமான கம்பிகள் தயாரிக்க பயன்படும் இரும்பு மூலப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த தொழிற்சாலை மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படாமல் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த தொழிற்சாலையால் காற்று மாசு ஏற்படுவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு இருந்தது.

ADVERTISEMENT

தொடர்ந்து இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ந.மகேஷ் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மனுதாரர் தரப்பினர் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூறிய கருத்துகளுக்கு பதிலளித்த தொழிற்சாலை நிர்வாகத்தார், 2016 ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளதாகவும், இந்த தொழிற்சாலை நவீன கருவிகளுடன் செயல்படுவதால் மாசு ஏற்படாது எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய வட்டாட்சியர் ந.மகேஷ் தொழிற்சாலை செயல்பட அவர்கள் பெற்றிருந்த அனுமதி சான்றிதழ்களை சரிபார்த்து, கோட்டாட்சியர் முன்னிலையில்  பேச்சுவார்த்தை நடத்துவதென்றும், அதுவரை கட்டுமான பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க அறிவுரை கூறியதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

Tags : private factory expansion Opposition Peace talks Tehsildar office
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT