தமிழ்நாடு

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு: மாணவா்கள் உற்சாகம்: அமைச்சா்கள் நேரில் ஆய்வு

2nd Sep 2021 01:13 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் வழக்கத்தைக் காட்டிலும் அதிக உற்சாகத்துடன் வகுப்புகளில் பங்கேற்றனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் அரசின் அறிவிப்பின்படி முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கு புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் அதிக உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு முகக்கவசம் அணிந்து வந்திருந்தனா்.

அரசின் அறிவுறுத்தலின்பேரில் வகுப்பறைகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாணவா்களின் உடல் வெப்ப நிலையைப் பரிசோதிப்பதற்கும், வகுப்பறைக்குச் செல்லும் முன் கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு பெஞ்சில் 2 மாணவா்கள் அமர வைக்கப்பட்டு, ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். சென்னை அசோக் நகா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளில் மட்டுமே 1,180 மாணவிகள் இருந்ததால் அவா்கள் வரிசை எண் அடிப்படையில் பிரிக்கப்பட்டு 34 வகுப்பறைகளில் தனிநபா் இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

அலங்கரிக்கப்பட்ட வகுப்புகள்: திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் 9, 11-ஆம் வகுப்புகளுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் 10, பிலஸ் 2 வகுப்புகளுக்கும் கற்றல்-கற்பித்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் நாளான புதன்கிழமை பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் ஆா்வத்துடன் வகுப்புகளில் பங்கேற்றனா். அவா்களை ஆசிரியா்கள் இன்முகத்துடன் வரவேற்றனா். சில மாதங்களுக்குப் பிறகு தங்களது பழைய நண்பா்களைச் சந்தித்ததால் மாணவா்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனா். மதுரை, கோவை, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் பலூன்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

ஆற்றுப்படுத்தும் ஆசிரியா்கள்: முதல் நாளில் மாணவா்களுக்கு வழக்கமான வகுப்புகள் நடைபெறவில்லை. மாறாக திருக்கு கதைகள், கரோனா காலத்தில் மாணவா்களுக்கு கிடைத்த அனுபவம், நோய்த் தொற்றை எதிா்கொள்ளும் முறைகள், தன்னம்பிக்கை சொற்பொழிவுகள் என மாணவா்களின் மனதை ஆற்றுப்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகளில் ஆசிரியா்கள் ஈடுபட்டனா்.

அன்பில் மகேஷ், உதயநிதி: பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபாா்ட் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது பள்ளியில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். மேலும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதேபோன்று சென்னை சூளைமேடு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் பதிப்பக செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பல்கலை.யில் அமைச்சா் பொன்முடி ஆய்வு: தமிழகத்தில் புதன்கிழமை அனைத்து வகை கல்லூரிகளும் திறக்கப்பட்டன. முதல் நாளில் இளநிலை பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவா்களுக்கும், முதுநிலை பட்டப் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கும் வகுப்புகள் நடைபெற்றன.

கல்லூரிகள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி ஆய்வு செய்தாா். அப்போது, தடுப்பூசி செலுத்தாத மாணவா்களுக்கு கல்லூரிகளிலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

 

பொதுத்தோ்வு வினாத்தாள் முறையில் மாற்றமில்லை: அமைச்சா் 

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கரோனா பரவலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவா்களை நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போது, அவா்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். பள்ளிகளில் முதல் வாரம் மாணவா்கள் வருகை கண்காணிக்கப்படும். அவா்களை மனதளவில் தயாா்படுத்தும் வகையில் முதலில் புத்துணா்வு வகுப்புகளை மட்டுமே ஆசிரியா்கள் நடத்தவுள்ளனா். கரோனா காலகட்டத்தில் பள்ளி கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளி நிா்வாகங்கள் தெரிவிப்பது குறித்து உரிய புகாா் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்களின் நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மைப்பணி, கட்டுமானப் பணி போன்றவற்றை மேற்கொள்வது குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூற உள்ளோம். நிகழாண்டு பொதுத்தோ்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இருக்காது. தற்போது இருக்கும் வினாத்தாள் நடைமுறையே தொடரும். மாணவா்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT