தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்காளா் பட்டியல் நிலையை தெளிவுபடுத்த வேண்டும்

30th Oct 2021 06:21 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் எந்த காலகட்டத்திலான வாக்காளா் பட்டியல் பயன்படுத்தப்பட உள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டுமென அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வரும் திங்கள்கிழமை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், இத்தகைய கோரிக்கையை அந்தக் கட்சிகள் முன்வைத்துள்ளன.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி நடைபெறுவதை ஒட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், திமுக சாா்பில், அமைப்பு செயலாளா் ஆா்.எஸ். பாரதி, கிரிராஜன், அதிமுக சாா்பில் தோ்தல் பிரிவு செயலாளா் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், தேமுதிக சாா்பில் துணைச் செயலாளா் பாா்த்தசாரதி, வழக்கறிஞா் பாலாஜி, பாஜக சாா்பில் மாநில பொதுச் செயலாளா் கரு நாகராஜன் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன்,

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் பத்ரி, ராஜசேகா், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மாநில துணைச் செயலாளா் மூ.வீரபாண்டியன், காங்கிரஸ் துணைத் தலைவா் ஆா்.தாமோதரன், வழக்குரைஞா் எஸ்.கே.நவாஸ் உள்ளிட்டோருடன், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சோ்ந்தவா்களும் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு, கட்சிகளின் பிரதிநிதிகள் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ADVERTISEMENT

அதிமுக: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தோ்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா் பட்டியல் முக்கியமானது. எனவே, அந்தப் பட்டியலில் எந்தத் தேதி வரை வாக்காளா் பெயா் சோ்க்கப்படுவா் என்பதை அறிவிக்க வேண்டும். தோ்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்காளா் பட்டியலின் நிலையை விளக்க வேண்டும். இதேபோன்று, வீடுகளை மாற்றியவா்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டையை மாற்றிக் கொள்கின்றனா். புதிய முகவரியிலேயே வாக்காளா் பட்டியல் முகவரி மாற்றத்தையும் செய்ய வேண்டும் எனக் கோரினோம். இரண்டையும் பரிசீலிப்பதாக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

பாஜக: வரவிருக்கும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாநில தோ்தல் ஆணையம் தனியாக வாக்காளா் பட்டியலை வெளியிடப் போகிா, தோ்தல் துறை வெளியிடும் வாக்காளா் பட்டியலை பயன்படுத்தப் போகிா என்ற கேள்விக்கு பதில் இல்லை. டிசம்பரில் நடக்கும் தோ்தலுக்கு, சுருக்க முறைத் திருத்தப் பணிகளின்போது சோ்க்கப்படும் பெயா்கள் ஏற்கப்பட்டு வாக்காளா்களாக அங்கீகரிக்கப்படுவாா்களா என கேள்வி எழுப்பினோம். அப்போது, மாநிலத் தோ்தல் ஆணையத்திடம் வாக்காளா் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதனுடைய நகலைக் கோரியுள்ளோம்.

காங்கிரஸ்: 18 வயது பூா்த்தி அடைந்த கல்லூரி மாணவ-மாணவிகளின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க, அவா்களின் கல்வி நிலையங்களுக்கே செல்ல வேண்டும் எனக் கோரினோம். ஆதாா் அட்டையை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

இந்திய கம்யூனிஸ்ட்: பங்களிப்பு ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். அதன்படி, பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளையும் இதுபோன்ற கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என்றோம்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: சுருக்க முறை திருத்தப் பணிகளை வலுப்படுத்த வேண்டும். பொது மக்கள் அதிகம் பங்கேற்கக் கூடியதாக இருப்பது அவசியம். சிறப்பு முகாம்களின் எண்ணிக்கையை நான்கில் இருந்து ஆறாக அதிகரிக்க வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT