தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு: தமிழக நடிகர்கள் குரல் கொடுப்பார்களா?

மா. பிரபாகரன்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எதிராக கேரள திரைப்பட நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுபோல, தமிழக நடிகர்கள் தமிழகத்துக்காக ஆதரவுக் குரல் கொடுப்பார்களா என்று ஐந்து மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசன, குடிநீர் தேவைக்கு முல்லைப்பெரியாறு அணை ஜீவாதாரமாக உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி. ஆனால் கேரள அரசின் தொடர் எதிர்ப்பால் உச்ச நீதிமன்றம் 142 அடி வரை தேக்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டது. 

தற்போது இந்த உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் கேரள அரசு இப்பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது. உபரி நீரால் இடுக்கி மாவட்டத்தில் கரையோரம் வாழும் 3,220 குடும்பங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.

முல்லைப்பெரியாறு அணையை நீக்குவோம்:  இந்நிலையில் கேரள நடிகர் பிருத்விராஜ் கடந்த அக். 24-இல் தனது ட்விட்டர் பதிவில் "முல்லைப்பெரியாறு அணையை நீக்குவோம்' என்ற படத்தைப் பதிவிட்டு, 125 ஆண்டுகள் பழைய அணை, இதற்கு காரணமோ, மன்னிப்போ தேவையில்லை. சரியாக போராட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் உண்ணி முகுந்தன் என்ற நடிகரும் இதே படத்தை பதிவு செய்து, நியாயமான உரிமைக்கு போராடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.  

கேரள எல்லைகள் முற்றுகை: இதற்கிடையில்  "கேரளா சேவ்' என்ற அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் ரசூல் ஜோய், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளம் அழியும் என்று பல்வேறு காணொலி காட்சிகளைப் பதிவு செய்து வந்தார். பெரியாறு வைகை பாசன ஐந்து மாவட்ட விவசாயிகள் பங்கேற்ற செயற்குழுக் கூட்டம் தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த அக். 24 இல் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறாகப் பிரசாரம் செய்வதுடன்,  வலைதளங்களிலும் பதிவு செய்து வரும் ரசூல் ஜோய் உள்ளிட்டவர்களைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் 7 எல்லைகளை நவ.1-இல் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளனர்.

கேரள முதல்வர் கருத்து: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக நீரை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். பின்னர் அக். 26 இல் கேரள சட்டப்பேரவையில்  முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அணை பற்றி தவறான கருத்துகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

இந்நிலையில் புதன்கிழமை மாலையில் வல்லக்கடவு வழியாக இடுக்கி மக்களவை உறுப்பினர் டீன் குரியாகோஸ் முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு வந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட கேரள போலீஸார் அணைப் பகுதிக்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுத்தனர். தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வருகிறேன் என்று கேரள போலீஸாரிடம் கூறி வாக்குவாதம் செய்தார். ஆனாலும் மக்களவை உறுப்பினரை போலீஸார் அனுமதிக்கவில்லை.

இரட்டை வேடம்: 'ஒரு பக்கம் அணை பலமாக உள்ளது என்றும், மறுபக்கம் புதிய அணை கட்டுவோம்; நீரைத் தேக்காதீர்கள்; கேரளத்தில் வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை' என்றும் கேரள முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள நடிகர்களுக்கு உள்ள அக்கறை தமிழக நடிகர்களுக்கு இல்லாதது வேதனையளிக்கிறது என்று ஐந்து மாவட்ட விவசாய சங்க பொதுச்செயலாளர் பொன். காட்சிக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கத்துக்குப் பின்னர் தற்போதுதான் தமிழக-கேரள எல்லைகளில் போக்குவரத்து தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளத்தில் வீண் வதந்திகளைப் பரப்பி வருவதால், இரு மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐந்து மாவட்ட மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT