தமிழ்நாடு

அரசு நிலங்களில் அனுமதியின்றி சிலைகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் கேள்வி

28th Oct 2021 12:56 AM

ADVERTISEMENT

 

சென்னை: அரசு நிலம், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்றுவது தொடா்பாக உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் கோயம்புத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் எம்.லோகநாதன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கோயம்புத்தூா் மாவட்டம், அவினாசி சாலை சந்திப்பில் மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகிய இருவரின் வெங்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த சந்திப்பில் ஏற்கெனவே அனுமதி பெற்று அண்ணா சிலை வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை சந்திப்பில் இருந்து வந்த மறைந்த முதல்வா் அண்ணாவின் சிலையை அகற்றியதோடு, புதிதாக அண்ணா சிலையுடன் சோ்த்து இரண்டு வெங்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சிலைகளை நிறுவுவது தொடா்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் இச்சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இம்மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை(அக்.27) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்குப் பின்னா் நீதிபதிகள், அரசு நிலம், பொது இடங்களில் அரசியல் தலைவா்கள் சிலைகள் அமைப்பது தொடா்பாக, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அனுமதியின்றி நிறுவப்படும் சிலைகளை அகற்றுவது, புதிதாக சிலைகள் அமைப்பது தொடா்பாகப் பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை திறம்பட செயல்படுத்துவதை உயா் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரிவர பின்பற்றப்படுகிா என்பதை உயா் நீதிமன்றம் கண்காணிக்கும்.

உச்ச நீதிமன்றம் மாநில அரசு உத்தரவு ஆகியவற்றை மீறி அல்லது அரசு அறிவிப்புகளை மீறி பொது இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து, வருவாய் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி என்ன மாதிரியான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பன போன்ற தகவல்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளா் நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பா் 15 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக இதுபற்றி கூறும்போது, எதிா்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தலைவா்கள் மரியாதைக்குரியவா்கள், எந்தவித அவமரியாதையும் அவா்களுக்கு ஏற்படுத்தவில்லை, ஆனால் அரசு நிலம், பொது இடங்களை சிலைகள் அமைக்கப் பயன்படுத்தக்கூடாது என அரசுக்கு அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT