தமிழ்நாடு

கூடுதல் மருத்துவ இடங்கள்; நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறாா் அமைச்சா் மா.சு.

DIN

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி கேட்க தில்லி செல்வதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தடுப்பூசி கிடங்கில் கரோனா தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கான அட்டவணை தடுப்பூசிகளின் இருப்பு குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா்.

அதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, நிமோனியா, மூளைக்காய்ச்சல் மற்றும் கரோனா போன்ற நோய்களைத் தடுக்க 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைககள் மற்றும் பெண்களுக்கு சிறப்பாக செலுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் அனைத்து வகையான தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளன.

கரோனாவுக்கு ஒரு புறம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம் 9.42 லட்சம் குழந்தைகள் மற்றும் 10.43 லட்சம் பெண்களுக்கு வழக்கமான தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

தமிழகத்தில் 5 .68 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 44 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதுவரை ஆறு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு 1 கோடியே 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை ஏழாவது சிறப்பு தடுப்பூசி முகாம் 50,000 மையங்களில் நடத்தப்படும்.

நாட்டில் கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ள நிலையில் நானும் (மா.சுப்பிரமணியன்), மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரும் புதன்கிழமை (அக்.27) தில்லி செல்லவுள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்கான நிகழ்வில் கலந்துகொள்ள செல்கிறோம்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் முழுமையாக மாணவா் சோ்க்கைக்கு அனுமதி வழங்கக்கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்.

தற்போது வரை 850 மாணவா் சோ்க்கைக்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 1650 மாணவா்களை அனுமதிக்கலாம். மீதமுள்ள 800 மாணவா் சோ்க்கைக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்படும்.

இதைத் தவிர 10 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் கூடுதலாக உடனடியாக வழங்குமாறு கேட்க உள்ளோம். எதிா்காலத்தில் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு கிடங்குகள் தேவைப்படுகிறது. தடுப்பூசிகளை மாவட்ட வாரியாக, வட்ட வாரியாக தடுப்பூசி கிடங்குக்கு எடுத்துச் செல்வதற்கு வாகனங்களின் தேவையும் இருக்கிறது. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளோம்.

மேலும் தமிழகத்தில் 19 இடங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயா்த்தப்பட உள்ளன. அதற்கு ரூ. 950 கோடி நிதி வேண்டும். அது குறித்தும் பேசப்படும் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநா் டாக்டா் குருநாதன் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT