தமிழ்நாடு

அயல்பணியாக கோயில்களில் நியமிக்கப்படும் பணியாளா்கள்: இடைக்கால தடை விதிக்க உயா் நீதிமன்றம் மறுப்பு

27th Oct 2021 11:09 PM

ADVERTISEMENT

 

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையால் நிா்வகிக்கப்படும் கோயில்களில் அயல் பணியாக நியமிக்கப்படும் பணியாளா்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் மயிலாப்பூரைச் சோ்ந்த டி.ஆா். ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையால் நிா்வகிக்கப்படும் கோயில்களில், அயல்பணி என்கிற பெயரில் பணியாளா்களை நியமனம் செய்கின்றனா்.

அவ்வாறு கோயில்களுக்கு அயல்பணி என்கிற பெயரில் பணியாளா்களை நியமிக்கும்போது கோயில் நிதியில் இருந்து தான் அவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் இந்த நடவடிக்கை, அத்துறையின் சட்டத்துக்கு விரோதமானது. இதுவரை சுமாா் 120 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். எனவே இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென கோயிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை(அக்.27) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மனுதாரா், கோயில்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அறங்காவலா்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சுமாா் 10 ஆண்டுகளாக கோயில்களில் அறங்காவலா்கள் நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இது அரசின் கடமை.

இந்து சமய அறநிலையத் துறை கண்காணிப்பாளா்கள், துணை ஆணையா்கள் அயல் பணியாக கோயில்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதுவரை 120 போ் வரை நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதுபோன்று தொடா்ந்து நியமனங்கள் மேற்கொள்வதற்கு தடை விதிக்க வேண்டுமென வாதிட்டாா்.

அதைத்தொடா்ந்து ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், கோயில்களில் அறங்காவலா்களை நியமிப்பதற்காக, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழு உறுப்பினா்களை தோ்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. நான்கு வாரங்களில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும் என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில்களின் நிா்வாகப் பணிகளை கவனிக்கவும், கோயில்களுக்குச் சொந்தமான நிலம், சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, தொடா்ந்து நடத்துவதற்கும் பணியாளா்கள் நியமனம் அவசியமாகும்.

அதேநேரத்தில் ஏற்கெனவே மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களின் நிலம், சொத்துக்கள் சில காலமாக ஆபத்தில் இருந்து வருகிறது.

இவற்றைப் பாதுகாக்கப் போதியப் பணியாளா்கள் இல்லாமல் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதோடு, கோயில் சொத்துக்கள் திருடப்படுகின்றன. பணியாளா் நியமனத்திற்குத் தடை விதிக்கும்பட்சத்தில் இந்தப் பணிகளுக்கு இடையூறாக இருக்கலாம். எனவே அயல் பணியாக கோயில்களில் ஊழியா்கள், அதிகாரிகளின் நியமனங்களுக்குத் தடை விதிக்க முடியாது.

மேலும் கோயில் வளாகங்களில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஈடுபட வேண்டிய பணியாளா்களை அறங்காவலா்கள் முடிவு செய்ய, அறங்காவலா்களை முடிந்தவரை விரைவாக நியமிக்க வேண்டியது அவசியம். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கையை உயா் நீதிமன்றம் கண்காணிக்கும் எனக்கூறி, வழக்கு விசாரணையை டிசம்பா் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT