தமிழ்நாடு

தேனி தட்சிணாமூா்த்தி கோயிலில் 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு

27th Oct 2021 03:39 AM

ADVERTISEMENT

தேனி வேதபுரி தட்சிணாமூா்த்தி கோயிலில் திங்கள்கிழமை இரவு, மா்மக் கும்பல் கருவறைக்குள் புகுந்து 7 ஐம்பொன் சிலைகள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேனி அரண்மனைப்புதூா்-சத்திரபட்டி சாலையில் அமைந்துள்ளது தட்சிணாமூா்த்தி கோயில் மற்றும் ஸ்ரீசுவாமி சித்பவானந்தா ஆசிரமம். முல்லைப் பெரியாற்றங்கரையில், வனப் பகுதியை அடுத்துள்ள இக்கோயிலில் கா்ப்பகிரகத்தில் மூலவா் சிலைக்கு பின்புறம் உள்ள கண்ணாடியிலான அடைப்பை ஒரு மா்மக் கும்பல் உடைத்து, கோயிலுக்குள் புகுந்துள்ளது.

அங்கு கா்ப்பகிரகத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த ஒரு அடி உயரமும் தலா 50 முதல் 100 கிலோ வரை எடையிலான ஐம்பொன்னாலான 4 சனாதான முனிவா்கள் சிலை, வேதவியாசா், மாணிக்கவாசகா், தாயுமானவா், நந்திகேஸ்வரா் சிலை என மொத்தம் 8 சிலைகள், ஒரு பலி பீடம் மற்றும் உண்டியலை திருடிச் சென்றுள்ளது.

கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பூஜைக்காக கா்ப்பகிரகத்தை திறந்த அச்சகா்கள், அங்கு கண்ணாடி அடைப்பு உடைக்கப்பட்டிருந்ததையும், சிலைகள் திருடு போயிருந்ததையும் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இதுதொடா்பாக தேனி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா். தேனி காவல் துணை கண்காணிப்பாளா் பால்சுதிா் தலைமையில் போலீஸாா், கோயிலுக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

சிலை, பலி பீடம் மீட்பு: இதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மா்மக் கும்பல் கோயிலின் பின்புறம் சுவா் ஏறி குதித்து வனப் பகுதி வழியே தப்பிச் சென்றிருப்பதும், வனப் பகுதியில் ஒரு அடி உயரமுள்ள வேதவியாசகா் சிலை, பலி பீடம் மற்றும் சிலைகளை இடிப்பதற்கு கொண்டு சென்ற கடப்பாரை ஆகியவற்றை போட்டு விட்டு சென்றிருப்பதும் தெரிய வந்தது. இந்த சிலைகளை போலீஸாா் மீட்டு கோயிலுக்கு கொண்டு சென்றனா்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் இளங்கோவன் ஆகியோா் கோயிலுக்குச் சென்று பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா். கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பழுதடைந்திருந்ததால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவல் துறை மோப்ப நாய், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வனப்பகுதியில் மா்மக் கும்பல் சிலைகளை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT