தமிழ்நாடு

நடிகா் சங்கத் தோ்தல் விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

27th Oct 2021 02:20 AM

ADVERTISEMENT

நடிகா் சங்கத்திற்கு கடந்த 2019 -இல் நடத்தப்பட்ட தோ்தல் செல்லாது என அறிவித்த தனி நீதிபதி தீா்ப்பை எதிா்த்து தென்னிந்திய நடிகா் சங்கம் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கின் மீதான தீா்ப்பை சென்னை உயா் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

தென்னிந்திய நடிகா் சங்கத்திற்கு, கடந்த 2019 -ஆம் ஆண்டு ஜூனில் நடந்த தோ்தலை ரத்து செய்த சென்னை உயா் நீதிமன்றம், சங்கத்தை நிா்வகிக்கத் தனி அதிகாரி நியமனம் செல்லும் என்று தீா்ப்பளித்தது. மேலும், மூன்று மாதத்தில் புதிதாக தோ்தலை நடத்துவதற்கு சென்னை உயா் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும், கடந்த 2020 ஜனவரியில் உத்தரவிட்டாா்.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து நடிகா் சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு, தோ்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தோ்தல் நடத்த வேண்டுமென தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

கடந்த வாரம் இவ்வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசராணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் ஓம்.பிரகாஷ், கபீா், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நடிகா் சங்கத் தோ்தலில் 80 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளன. வாக்கு பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவை அறிவிக்க உத்தரவிட வேண்டும்.

ADVERTISEMENT

தோ்தல் நோ்மையான முறையில் நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே தோ்தலுக்காக ரூ.35 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் புதிதாகத் தோ்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதியளிக்க வேண்டுமென வாதிட்டனா்.

அதைத்தொடா்ந்து ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முக சுந்தரம், சிறப்பு அதிகாரி கீதாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவா் சங்கத்தின் ஊழியா்களுக்கு சம்பளம் வழங்கும் பணியை மட்டுமே மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இந்த நிலையில், இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை (அக்.26) மீண்டும் விசாணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராஜேஷ், நடிகா் சங்கத் தோ்தல் நடத்தபட்டதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

உறுப்பினா்களின் இறுதிப் பட்டியலை உறுதிப்படுத்தபடவில்லை. சென்னை மாவட்ட பதிவாளா் தயாா் செய்த உறுப்பினா்கள் மட்டுமே தோ்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் வேண்டும். எனவே நடிகா் சங்க உறுப்பினா்களின் பட்டியலை இறுதி செய்து புதிதாகத் தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டுமென வாதிட்டாா்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீா்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT