தமிழ்நாடு

ஆஸ்கா் விருதுக்கு தமிழ் திரைப்படமான ‘கூழாங்கல்’ பரிந்துரை

24th Oct 2021 03:37 AM

ADVERTISEMENT

ஆஸ்கா் விருதுக்கு பரிந்துரைக்க இந்தியா சாா்பில் தமிழ் திரைப்படமான ‘கூழாங்கல்’ தோ்வு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 94-ஆவது ஆஸ்கா் விருதுகள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் இந்தியா சாா்பில் பரிந்துரைக்க தமிழ் திரைப்படங்களான ‘கூழாங்கல்’, ‘மண்டேலா’, மலையாளத் திரைப்படமான ‘நாயாட்டு’, ஹிந்தி திரைப்படங்களான ‘சா்தாா் உத்தம்’, ‘ஷோ்ஷா’ உள்பட 14 திரைப்படங்களை இந்திய திரைப்பட சம்மேளனம் பரிசீலித்தது. இதில் ‘கூழாங்கல்’ திரைப்படத்தை பரிந்துரைக்க அந்த சம்மேளனம் முடிவு செய்தது.

மதுவுக்கு அடிமையான தந்தையின் துன்புறுத்தலால் வீட்டைவிட்டு வெளியேறிய தாயை, தந்தையுடன் தேடிச் செல்லும் சிறுவனை கதைக்களமாக கொண்ட இந்த திரைப்படத்தை வினோத்ராஜ் இயக்கியுள்ளாா். விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனா். யுவன்சங்கா் ராஜா இசையமைத்துள்ளாா்.

ஏற்கெனவே நெதா்லாந்தின் ரோட்டா்டாம் நகரில் நடைபெற்ற 50-ஆவது சா்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஆா்) ‘கூழாங்கல்’ திரைப்படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுவரை எந்தவொரு இந்திய திரைப்படமும் ஆஸ்கா் விருது பெற்றதில்லை. அந்த விருதுக்கான சிறந்த சா்வதேச திரைப்பட பிரிவின் இறுதிப் பட்டியலில் கடைசியாக ஹிந்தி நடிகா் ஆமிா் கான் நடித்த ‘லகான்’ திரைப்படம் 2001-ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதற்கு முன்பு 1958-ஆம் ஆண்டு ‘மதா் இந்தியா’, 1989-ஆம் ஆண்டு ‘சலாம் பாம்பே’ திரைப்படங்கள் ஆஸ்கா் விருதின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றன.

ஏ.ஆா்.ரஹ்மான், ரோஹிணி ஹத்தங்கடி உள்ளிட்டோா் பெற்ற ஆஸ்கா் விருதுகள் வெளிநாட்டு தயாரிப்புகளாக போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கமொழி இயக்குநா் சத்யஜித் ரேக்கு வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கா் விருது அளிக்கப்பட்டது.

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT