தமிழ்நாடு

10 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

24th Oct 2021 03:06 PM

ADVERTISEMENT

10 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020ம் ஆண்டின் தொடக்க காலத்திலிருந்து கரோனா பெருந்தொற்று உலகை உலுக்கி வருகிறது, இதனால் மக்கள் அனுபவித்த சோதனைகளும் துன்ப துயரங்களும் கொஞ்சமல்ல. அனால் மக்களின் துன்பம் கண்டு உள்ளம் துடித்த பிரதமர் நரேந்திர மோடி, "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரின் வழி நிற்பவராக இந்தியாவைப் பெருந்தொற்றிலிருந்து மீட்கும் பணியைத் தொடங்கினார். தடுப்பூசி கண்டுபிடித்தல் மட்டுமே இந்த நோயைக் கட்டுப்படுத்தும் ஆயுதம் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு இந்திய விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

வழக்கம்போல் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியானபோது எதிர்க்கட்சிகள் கேலி பேசியதோடு மக்களிடையே பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தின. ஆனால் எடுத்த காரியத்தை முடிப்பதில் எப்போதும் உறுதியுடன் இருக்கும் பிரதமர் மோடி தடுப்பூசி தயாரிப்பதிலும் உறுதிகாட்டினார். உள்நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் இறங்கிய ஹைதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவை இனைந்து மேற்கொண்ட முயற்சியின் பயனாக கோவாக்ஸின் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது, மறுபக்கம் ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனங்களுடன் இணைந்து சீரம் நிறுவனம் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

இந்தப் பணிகளை பிரதமர் நேரடியாக கவனம் செலுத்தி வேகப்படுத்தியதன் விளைவாக 2021 ஜனவரி 16ம் தேதி கரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. உலக நாடுகள் பலவும் தடுப்பூசிக்கு ஏங்கியிருந்த காலத்தில் இந்தியா எங்களாலும் முடியும் என்று இரண்டு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து வரலாற்றில் இடம்பிடித்தது. முதலில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் என முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த சாதனையால் எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரம், அவநம்பிக்கை முடிவுக்கு வந்தது. வெகு விரைவிலேயே 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி - அதுவும் கட்டணமின்றி தடுப்பூசி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இதையும் படிக்க- முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள்

130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதை சாதிக்க முடியுமா என்று பேசியவர்கள் வியந்துபோகும் வகையில் 10 மாதங்களுக்குள் 100 கோடி பேர் முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்கள் அரசுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி உலகிற்கு இந்தியா முன்மாதிரியாக இருப்பதற்கு காரணமாக உயர்ந்து நிற்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அது மட்டுமின்றி மிக முக்கியமானவர்களுக்கு முன்னுரிமை என்ற கலாச்சாரம் அகற்றப்பட்டு அனைவரும் சமம் என்பதற்குத் தம்மையே பிரதமர் உதாரணமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமம், நகரம், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கரோனா வைரசுக்கு இல்லாதபோது அதனை அழிக்கும் தடுப்பூசிக்கும் இருக்கக்கூடாது என்பதில் பிரதமர் உறுதியாக இருந்தார், இதனால் பனிபடர்ந்த காஷ்மீர் முதல் கடல் அலை வீசும் கன்னியாகுமரி வரை காடுகள் அடர்ந்த அருணாச்சலப்பிரதேசம் முதல் பாலைவனம் உள்ள ராஜஸ்தானின் தார் பகுதிவரை, கடல் சூழ்ந்த அந்தமான் உள்ளிட்ட தீவுகளுக்கும் தடுப்பூசி அனுப்பப்பட்டு மக்கள் செலுத்திகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு நிர்வாகம் மட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் தடுப்பூசி திட்டம் இணைத்துக்கொண்டது.  இந்தியாவின் இத்தகைய சாதனையை உலகத் தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

மேக் இன் இந்தியா என்பதைத் தாரக மந்திரமாக கொண்டுள்ள மத்திய அரசு இந்தியாவிலேயே கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்ததோடு ரஷியாவின் தயாரிப்பான ஸ்புட்னிக்-5 தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மார்டர்னா, ஜான்சன் & ஜான்சன், ஜைடஸ் கெடிலா ஆகிய தடுப்பூசிகளையும் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு   இறை என்று வைக்கப்படும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என பணியாற்றிவரும் பிரதமர் நரேந்திர மோடியை இந்த தேசத்தை காக்க வந்த கடவுள் என மக்கள் போற்றுகின்றனர். மக்களின் ஒத்துழைப்புடன் எந்த சாதனையையும் படைக்கும் ஆற்றல் தேசத்திற்கு உண்டு; பிரதமர் மோடிக்கு உண்டு என்பதை 10 மாதங்களில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி என்பது நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : LMurugan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT