தமிழ்நாடு

திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு: நவ.1 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி ?

23rd Oct 2021 08:04 PM

ADVERTISEMENT

நவ.1 முதல் அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதியளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.658, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 20.10.2021-ன்படி, 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த்
தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தலைமையில் 23-10-2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. 
• அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.
• திரையரங்குகள் நூறு சதவிகிதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
• கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
• ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
• மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பேருந்து போக்குவரத்து, நூறு சதவிகிதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
• அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் / மையங்கள் நூறு சதவிகிதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
• தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு
நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க உதவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags : cmstalin
ADVERTISEMENT
ADVERTISEMENT