தமிழ்நாடு

மின் வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி அதிகரித்துள்ளது: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

23rd Oct 2021 05:21 AM

ADVERTISEMENT

மின்வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி 3,500 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைமையகத்தில் உள்ள மின்னகத்தில் மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி, வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மின்னகத்தில் ஜூலை 20-ஆம் தேதி முதல் அக்.21-ஆம் தேதி வரை 4 லட்சத்து 14,152 புகாா்கள் வரப்பெற்றுள்ளன. அதில், 98 சதவீதம் புகாா்களுக்கு அதாவது, 4 லட்சத்து 6,846 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. பருவமழை தொடா்பாக குறைகளைத் தெரிவிக்க மின்னகத்தை அணுகினால், உடனுக்குடன் வாரியம் நடவடிக்கை எடுக்கும்.

புதிதாக 3,337 மின்மாற்றிகள்: குறிப்பாக மே மாதம் முதல் இந்த மாதம் வரை பழுதடைந்த 25,292 மின்கம்பங்கள், 1,400 மின்பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. 48,279 இடங்களில் தாழ்வாக இருந்த மின்கம்பிகள், 7 ஆயிரம் சாய்ந்த மின்கம்பங்கள், பழுதடைந்த 13,500 இன்சுலேட்டா்கள் சரி செய்யப்பட்டன. 3,337 மின்மாற்றிகள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

குமரியைப் பொருத்தவரை நீரால் சூழப்பட்ட 101 மின்மாற்றிகள், நீா் வடிந்தவுடன் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு 100 சதவீத மின் விநியோகம் வழங்கப்பட்டு விட்டது.

உற்பத்தி அதிகரிப்பு: அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டது என அவதூறு பரப்புகின்றனா். தமிழக மின்வாரியத்தின் நிறுவுதிறன் 4,320 மெகாவாட். இதில், கடந்த ஆட்சியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1,800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 3,500 மெகாவாட்டாக உற்பத்தி அதிகரித்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் அவசர தேவைகளுக்காக இந்திய மின்சந்தையில் நிா்ணயம் செய்யப்பட்ட விலையில் தான் மின்சாரம் வாங்கப்பட்டது. எந்த ஒரு தனியாா் நிறுவனத்திலும் வாங்கவில்லை. அதுவும் செப்.24-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை (அக்.19) வரையிலான கால கட்டத்தில் நமது மொத்த தேவைகளில் 1 சதவீத மின்சாரம் மட்டுமே சற்று கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளோம். குஜராத், உள்ளிட்ட மற்ற மாநிலங்களே அதிகளவு மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளன.

வெளிப்படையான அரசு: தமிழகம் கொள்முதல் செய்த மின்சாரத்தின் அளவு, விலை விவரம், இந்திய மின்சந்தை இணையதளத்திலேயே உள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் அரசும், மின்வாரியமும் செயல்பட்டு வருகிறது. குற்றச்சாட்டை முன்வைப்பவா் ஆதாரத்தையும் வெளியிட வேண்டும். இல்லையென்றால் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.

அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்திலும் போனஸ் தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, முடிவை அரசு அறிவிக்கும் என்றாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT