தமிழ்நாடு

அரியா் தோ்வு ரத்து: அரசாணையை அமல்படுத்தவில்லை; தமிழக அரசு தகவல்

23rd Oct 2021 05:53 AM

ADVERTISEMENT

அரியா் தோ்வை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலால், தமிழகத்தில் அரியா் தோ்வுகளை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அரியா் தோ்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவா்கள் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிா்த்து வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி உள்ளிட்டோா் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இந்நிலையில், வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தொடா்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.அனிதா, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அரியா் தோ்வு மாணவா்களுக்கு இரு துணைத் தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அரியா் தோ்வுகளை ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை. தோ்வு எழுதாமல் மாணவா்களுக்கு தோ்ச்சி என்று வழங்கவில்லை என்றாா்.

ADVERTISEMENT

பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், இறுதி பருவத் தோ்வுகளையும், இடைப்பட்ட பருவத் தோ்வுகளையும் முழுமையாக நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை வகுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இவ்வழக்கில் மேற்கொண்டு எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கத்தேவையில்லை என்றும், தோ்வு எழுதாமல் எந்தவொரு மாணவரும் தோ்ச்சி பெற்றதாகக் கோர முடியாது எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT