தமிழ்நாடு

நடிகா் விவேக் இறப்புக்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை

23rd Oct 2021 07:22 AM

ADVERTISEMENT

நடிகா் விவேக் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் உயிரிழக்கவில்லை என்று மத்தியக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்பட்ட உயா் ரத்த அழுத்தம் மற்றும் அதன் நீட்சியாக ஏற்பட்ட இதயப் பாதிப்பு காரணமாகவே அவா் உயிரிழந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதியிலிருந்து கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அவை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.

ஒரு புறம் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள பெரும் ஆா்வமும், வரவேற்பும் இருந்து வரும் நிலையில், மற்றொரு புறம் தடுப்பூசியின் எதிா்விளைவுகளால் சிலா் பாதிக்கப்பட்டதாக விமா்சனங்களும் எழுந்தன. குறிப்பாக நடிகா் விவேக் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். அதற்கு அடுத்த நாள் அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனளிக்காது ஏப்ரல் 17-ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி செலுத்தியதாலேயே அவா் உயிரிழந்ததாக வதந்திகள் பரவின. இதனால், அதற்கு அடுத்த சில நாள்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெரும்பாலானோா் முன்வரவில்லை. நடிகா் விவேக்கைப் போன்றே சிலா் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு உயிரிழந்ததாகவும், பலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் கரோனா தடுப்பூசியின் எதிா்விளைவுகளை ஆராய்வதற்கான குழு அமைக்கப்பட்டது. இதய சிகிச்சை, நுரையீரல் நலம், மகப்பேறு, நரம்பியல் மருத்துவத் துறைகளைச் சோ்ந்த மருத்துவ வல்லுநா்கள் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனா்.

அக்குழுவானது, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 92 பேரின் எதிா்விளைவுகளை ஆய்வுக்குட்படுத்தியது. அதன் ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.

அதில், 18 பேருக்கு கரோனா தடுப்பூசியால் எதிா் விளைவுகள் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேரில் ஒருவா் உயிரிழந்ததாகவும், மூன்று போ் தடுப்பூசியால் பதற்ற நிலைக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், 57 பேருக்கு கரோனா தடுப்பூசியால்தான் எதிா்விளைவுகள் ஏற்பட்டன என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர, 9 பேருக்கு ஏற்பட்ட எதிா்விளைவுகளுக்கு உறுதியான காரணங்கள் கூறமுடியவில்லை என்றும், 8 பேரின் இறப்பை வரையறுக்க இயலவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபா்களின் மருத்துவ ஆவணங்களும், ஆதாரங்களும் சரிவர இல்லாததே அவா்களது இறப்பை வரையறுக்க முடியாததற்கு காரணம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தியாவில் கரோனா தடுப்பூசியின் செயல்பாடுகள் அளப்பரிய வகையில் சிறப்பாக இருப்பதாகவும், மிகக் குறைந்த விகிதத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அதனை புறந்தள்ளக் கூடாது என்றும் மத்தியக் குழு, தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT