தமிழ்நாடு

பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: கடை உரிமையாளருக்கு ஜாமீன்

23rd Oct 2021 05:22 AM

ADVERTISEMENT

ஆரணியில் பிரியாணி சாப்பிட்டதில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாகக் கூறியதை ஏற்ற சென்னை உயா் நீதிமன்றம், பிரியாணி கடை உரிமையாளா், சமையல் மாஸ்டா் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ‘7 ஸ்டாா் பிரியாணி’ கடையில், துந்தரீகம்பேட்டையைச் சோ்ந்த ஆனந்த், தன் மனைவி பிரியதா்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோஷினி ஆகியோருடன் செப்டம்பா் 8-ஆம் தேதி பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவற்றை சாப்பிட்டனா்.

உணவருந்திவிட்டு வீடு திரும்பியதும் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நால்வரும் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். சிகிச்சையில் இருந்த சிறுமி லோஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஆரணி நகர காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் பிரியதா்ஷினி அளித்த புகாரின் பேரின் பிரியாணி கடை உரிமையாளா் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டா் முனியாண்டி ஆகிய இருவரும் செப்டம்பா் 12-இல் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

இவ்வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.ஆா்.அப்பாசாமி, உணவகத்தைத் தரமாகப் பராமரித்து வருவதாகவும், கவனக்குறைவால் இச்சம்பவம் நடைபெற்றது என்றும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா்.

இருதரப்பு வாதங்களுக்குப் பின்னா், மனுதாரா்கள் ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் இருப்பதையும், சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதைக் கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

இரண்டு வாரங்களுக்கு தினமும் காலை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும், சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையைச் செலுத்தியதற்கான ஆவணங்களை ஆரணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மனுதாரா்கள் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஏ.கோபிநாத் ஆஜராகி வாதிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT