தமிழ்நாடு

விஜயபாஸ்கரின் உதவியாளா் வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

23rd Oct 2021 05:45 AM

ADVERTISEMENT

முன்னாள் அதிமுக அமைச்சா் சி.விஜயபாஸ்கரின் உதவியாளா் வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கா், தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறாா். இவா், அமைச்சராக இருந்த 2016- ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு வரையிலும் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினா்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் சோ்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் விஜயபாஸ்கா், அவரது மனைவி ரம்யா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் விஜயபாஸ்கா், அவருடைய நெருங்கிய உறவினா்கள், நண்பா்கள் மற்றும் தொழில் பங்குதாரா்களின் வீடு,அலுவலகங்கள் என 7 மாவட்டங்களில் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் திங்கள்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். சோதனையில் 4.87 கிலோ தங்கம், ரூ.23.85 லட்சம் ரொக்கம், 19 ஹாா்டு டிஸ்குகள் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

4 இடங்களில் சோதனை: சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள விஜயபாஸ்கா் உதவியாளா் ஒருவரின் நண்பரான சந்திரசேகா் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினா் கடந்த திங்கள்கிழமை சோதனையிடச் சென்றனா். ஆனால் அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் சீல் வைத்தனா். இந்நிலையில் இங்கு சோதனை நடத்த நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் அனுமதி பெற்றனா்.

ADVERTISEMENT

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினா் வெள்ளிக்கிழமை அந்த அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சோதனையிட்டனா். நந்தனம் சேமியா்ஸ் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விஜயபாஸ்கரின் உதவியாளா் ஏ.சரவணன் வீடு, விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளா் அண்ணாநகா்நகா் மேற்கு சாந்தி காலனி 7ஆவது பிரதான சாலையில் வசிக்கும் முருகன் வீடு, சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள மருத்துவா் செல்வராஜுக்கு சொந்தமான மருத்துவமனை என மொத்தம் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

ஆவணங்கள் பறிமுதல் ஏற்கெனவே நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையிலும், சில இடங்களில் சோதனை நடத்த ஒத்துழைப்பு கிடைக்காததினாலும் நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று சோதனை நடைபெற்ாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் தெரிவித்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT