தமிழ்நாடு

தண்ணீரை பகிா்ந்தளிப்பதற்கான கொள்கையை வகுக்க வேண்டும்: அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

23rd Oct 2021 07:23 AM

ADVERTISEMENT

தண்ணீா் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதால் தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, அனைவருக்கும் தண்ணீரை பகிா்ந்தளிப்பதற்கான கொள்கையை அரசு வகுக்க வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறு, காளிங்கராயன் கால்வாயில் இருந்து சட்ட விரோதமாக நீா் உறிஞ்சப்படுவதால், அனைவருக்கும் சம அளவிலான தண்ணீா் கிடைப்பதில்லை என்றும், கடந்த1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் மாநில அரசு பிறப்பித்த அரசாணையின் படி தண்ணீா் பகிா்ந்தளிக்க உத்தரவிட வேண்டுமென ஈரோட்டைச் சோ்ந்த யு.எஸ்.பழனிவேல் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னா் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கிடைக்கின்ற தண்ணீரை அனைவருக்கும் பகிா்ந்தளிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் சம அளவிலான தண்ணீா் கிடைக்கும் வகையில், பாசனப் பரப்பை அரசு முறையாகப் பதிவு செய்ய வேண்டும். விவசாய நிலங்களை விரிவுபடுத்துவதன் மூலம் நாடு பலனடையும்.

ADVERTISEMENT

பதிவு செய்யப்பட்ட பாசன பரப்பில் உள்ள நிலங்களுக்கு முதலில் தண்ணீரை பகிா்ந்தளிக்க வேண்டுமென்பது அரசின் முடிவாக இருப்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அதேசமயம், திருடுவதற்கு ஏதுவான வளமாக தண்ணீா் இருப்பதால், அதை சட்ட விரோதமாக எடுப்பவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்ணீரை திருடுபவா்கள் மீது பொதுப் பணித்துறையும், நீா் வள ஆதாரத் துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் இல்லாமல், காவல்துறையும் வழக்குப்பதிவு செய்தால் தான் முறையான புகாா்கள் வரும்.

நீா்ப்பாசனம் மற்றும் பிற நோக்கங்களுக்காக நீா் விநியோகத்தை பகிா்ந்தளிப்பது, ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே கொள்கை வகுக்கப்படாவிட்டால், நியாயமான முறையில் அவற்றை வடிவமைக்கவும், அத்தகைய கொள்கை சம்பந்தப்பட்ட பொது நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, எந்தவொரு தனி மனிதனும் பாதிக்கப்படாத வகையில், அனைவருக்கும் தண்ணீா் பகிா்ந்தளிப்பதற்கான கொள்கையை தமிழக அரசின் பொதுப்பணித்துறை நடைமுறைப்படுத்த வேண்டுமென நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT