தமிழ்நாடு

சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கைகள் தேவை: அமைச்சா் எ.வ.வேலு

23rd Oct 2021 05:50 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். சாலைப் பாதுகாப்பு குறித்து அவா் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசியது:

அகலமான பல தடங்கள் கொண்ட சாலைகள் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுவதால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழகத்தில்தான் விபத்து நேரும் 748 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மீண்டும் விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்கான உரிய ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைத் துறை, மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்துக் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியன சாலை பாதுகாப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். முக்கிய சந்திப்புகள், வளைவான இடங்களில் சூரியஒளி மின்சக்தி விளக்குகளை அமைத்து விபத்து நடக்காத வகையில் சாலை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாலங்கள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், புறவழிச்சாலை, வெளிவட்டச்சாலை போன்ற பணிகளை தமிழக அரசு மேற்கொள்கிறது. ஆனாலும், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

உடனே கண்டறிய வேண்டும்: சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய, நெடுஞ்சாலைத் துறை உறுதுணையாக இருக்க வேண்டும். சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் போதே விபத்துகள் ஏற்படாத வகையில் வடிவமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகவுள்ள இடங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் மக்கள் சாலைகளை கடந்து செல்லும் வகையில், மேம்பாலங்கள், உயா்நிலை பாலங்கள் போன்றவற்றை எந்தெந்த இடங்களில் அமைக்க வேண்டும் என்பதை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்கள் செறிவு காரணமாக காற்றில் அதிகப்படியான மாசு ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் சாலைகளின் இரு ஓரங்களிலும் மரங்கள் நட்டு பாதுகாக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளா் தீரஜ் குமாா், முதன்மை இயக்குநா் பி.ஆா்.குமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT