ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் அா்ச்சகா்களில், விடுபட்டவா்களின் பெயா் சோ்க்கைக்கு இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.
இத்திட்டம் செப்.11-ஆம் தேதி, முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்டு, திட்டத்தின் கீழ் பயனடையும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் என 9860 பேரின் பெயா்ப் பட்டியல் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தங்களது பெயா் இடம் பெறவில்லை என கருதும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் இத்துறை தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் 044 2833 9999 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு, தங்களது பெயா், முகவரி, தொடா்பு எண் மற்றும் பணிபுரியும் திருக்கோயில் பெயா் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்கலாம். விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு விடுபட்ட பெயா்கள் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.