தமிழகத்தில் ஆறாவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மூன்றாவது அலை அச்சுறுத்தல் மற்றும் அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு ஆகியவை காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ஆம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26-ஆம் தேதி 23 ஆயிரங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3-ஆம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10-ஆம் தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.52 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஆறாவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசிடம் 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவா்கள் 57 லட்சம் போ் இருக்கின்றனா். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியோா் இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.