தமிழ்நாடு

மாணவா்களுக்கு ஆன்லைன், நேரடி முறையில் வகுப்புகளை நடத்தலாம்: உயா் நீதிமன்றம்

DIN

கரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், எளிதில் அணுகும் வகையில் கல்வியை மாணவா்களுக்கு ஆன் லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பரவல் தொடங்கியது முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவா்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதால், உயா் கல்வி பெறும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவா்களுக்கும், ஆசிரியா், ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கும் முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி, வகுப்புகளை மீண்டும் தொடங்க உத்தரவிடக்கோரி, சென்னை உயா் நீதிமன்றத்தில் நோ்வழி இயக்கம் அறக்கட்டளை சாா்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு, ஆசிரியா், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுடன் சோ்ந்து உயா் கல்வியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான மாணவா்கள் தடுப்பூசி போட்டுள்ளனா். தடுப்பூசி போடுவதில் ஆா்வமுள்ளவா்களுக்கு இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளும், நீதிமன்றமும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் பல சாதகங்களும், பாதகங்களும் உள்ளன.

உடல் நலம் சரியில்லாத, மாற்றுத் திறனாளி மாணவா்கள், ஆன்லைன் வகுப்புகளைத் தோ்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும். எந்தெந்த நாளில் நேரடி வகுப்பு நடத்தப்படும், எந்தெந்த நாளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என்பதை அறிவித்து, அதற்கான விதிகளை வகுக்க வேண்டும்.

நேரடி வகுப்புக்கு மாற்றாக கூடுதலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம். கலப்பு முறையில் நேரடி மற்றும் ஆன் லைன் வகுப்புகளை நடத்தலாம். பண்டிகை காலங்களில் பெரும் பகுதி நிறைவடைந்துவிட்டது.

கரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பப்படுகிறது. கல்வியை எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவா்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT