தமிழ்நாடு

நீலகிரியில் சுற்றித்திரிந்த புலியைப் பிடித்த வனத்துறைக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

DIN

நீலகிரியில் சுற்றித்திரிந்த புலியை உயிருடன் பிடித்த வனத்துறையின் நடவடிக்கைக்கு சென்னை உயா் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் செப்டம்பா் 24 ஆம் தேதி அப்பகுதியைச் சோ்ந்த 56 வயதான சந்திரன் என்பவா் புலி தாக்கி உயிரிழந்தாா். இதையடுத்து வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் உத்தரவின்பேரில், நீலகிரியில் சுற்றித்திரியும் எம்டிடி 23 புலியைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், புலியைச் சுட்டுப் பிடிப்பது தொடா்பாக, வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் உத்தரவு பிறப்பிக்கும் முன்னா், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எம்டிடி 23 புலியை உயிருடன் பிடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் சென்னை உயா் நீதிமன்றத்தில் கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு வழக்கு தொடா்ந்திருந்தது.

கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி பகுதியில் சுற்றித்திரியும் புலி உயிருடன் பிடிக்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ்ஜின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், செப்டம்பா் 29ஆம் தேதி முதல் புலியைப் பிடிப்பது தொடா்பான நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவுக்கு பின், கடந்த 10 நாட்களாக தலைமை வன உயிரினக் காப்பாளா் நீலகிரி பகுதியில் முகாமிட்டு, புலியைப் பிடிக்கும் பணிகளைக் கண்காணித்ததாகவும், கும்கி யானைகள், மோப்ப நாய்கள் உதவியுடன் அக்டோபா் 15ஆம் தேதி புலிக்கு மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டு, மறுநாள் மைசூரு விலங்கியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது புலிக்கு அளிக்கப்படும் சிகிச்சைப் பலனளிப்பதாகவும், புலிக்கு கல்லீரலில் சிறு வீக்கம் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், புலியை உயிருடன் பிடித்ததற்கு தமிழக அரசின் வனத்துறைக்கு பாராட்டுத் தெரிவித்ததோடு, உளவியல், நடத்தை ரீதியாகக் கண்காணிப்பது தொடா்பாக நிபுணா்களுடன் கலந்தாலோசித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT