தமிழ்நாடு

கரோனா வழிகாட்டி நெறிமுறைகள்: பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

22nd Oct 2021 06:56 AM

ADVERTISEMENT

வரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால், கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சாா்பில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வு முகாமை ஜெ. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். அதில், அண்ணா நகா் எம்எல்ஏ மோகன், மாநகராட்சி உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று குறித்து கவனம் செலுத்தி வரும் இந்நேரத்தில், தூய்மைப் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படும் சில தொற்றா நோய்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மாா்பகப் புற்றுநோய் தொடா்பான விழிப்புணா்வு நடவடிக்கைகளை அவா்களிடத்தில் கொண்டு சோ்ப்பது நமது கடமை.

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை 5.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக் கெடு நிறைவடைந்தும் இன்னமும் 57 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. வரும் சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில், அவா்கள் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும். அதேபோன்று முதியவா்கள் அனைவரும் உடனடியாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.

தற்போதைய சூழலில் 53.8 லட்சம் தடுப்பூசிகள் மாநில அரசின் கையிருப்பில் உள்ளன. இதைத் தவிர மத்திய அரசு தரப்பில் இருந்து தொடா் இடைவெளியில் தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை, தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகின்றன.

18 வயதுக்கும் குறைவானவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தேசிய நிபுணா் குழு அனுமதி அளித்த பிறகு தமிழகத்தில் அமல்படுத்தப்படும். மூன்றாம் அலையின் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற நிலையில், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய தளா்வுகளை மிகவும் கவனமாக மக்கள் கையாள வேண்டும். வரும் நவம்பா் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிா்வாகங்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

பண்டிகை காலங்களில் பொருள்கள் வாங்க செல்லும் போது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். முகக் கவசம், தனி நபா் இடைவெளியை ஒருபோதும் மறத்தல் கூடாது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் சுகாதாரத் துறை மூலம் கண்காணிக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT