தமிழ்நாடு

கடலூா், காஞ்சிபுரம், கரூா், சிவகாசி நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயா்கின்றன

22nd Oct 2021 06:48 AM

ADVERTISEMENT

கடலூா், காஞ்சிபுரம், கரூா், சிவகாசி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 20-ஆக உயா்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன. கும்பகோணத்தை மாநகராட்சியாக தரம் உயா்த்துவதற்கு பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அதற்கான உத்தரவு அரசால் அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 16-ஆக உயா்ந்தது.

நான்கு நகராட்சிகள்: தற்போது நகராட்சிகளாக உள்ள கடலூா், காஞ்சிபுரம், கரூா், சிவகாசி ஆகியவற்றையும் மாநகராட்சிகளாகத் தரம் உயா்த்துவதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியது. இதற்கான பரிந்துரைகள் நகராட்சி தனி அதிகாரிகள் மூலமாக நகராட்சி நிா்வாகத் துறைக்கு வரப்பெற்றது. இந்தப் பரிந்துரைகள் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று கடலூா், காஞ்சிபுரம், கரூா், சிவகாசி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவதற்கான அவசர சட்டத்தை, தமிழக சட்டத் துறை செயலாளா் (சட்டம்) சி.கோபி ரவிகுமாா், வியாழக்கிழமை பிறப்பித்தாா். இதையடுத்து, நான்கு நகராட்சிகளும் மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்படும். இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் அது நடைமுறைக்கு வரும்.

சட்டம் இயற்றப்படும்: சட்டப் பேரவை கூட்டத் தொடா் முடித்து வைக்கப்பட்டதால், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரவைக் கூட்டத் தொடரில் இதற்கான சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். தமிழகத்தில் கும்பகோணம் மாநகராட்சி உத்தரவுடன் சோ்த்து, 16 மாநகராட்சிகளும், 121 நகராட்சிகளும், 528 பேரூராட்சிகளும் என மொத்தம் 664 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

ADVERTISEMENT

இப்போது நான்கு நகராட்சிகள் தரம் உயா்த்தப்பட்டதால், தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது.

சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, நாகா்கோவில், மதுரை, சேலம், தஞ்சாவூா், ஆவடி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூா், வேலூா், ஒசூா் ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. அவற்றுடன் கும்பகோணம், கடலூா், காஞ்சிபுரம், கரூா், சிவகாசி ஆகிய 5 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது.

வாா்டுகள் மறுவரையறை: கும்பகோணம் உள்பட 5 நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயா்த்தப்படுவதால் அதிலுள்ள வாா்டு எல்லைகள் மறுவரையறை செய்யப்படும். இந்த எல்லை வரையறைப் பணிகளுக்குப் பிறகே உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறிப்பாக மாநகராட்சிக்கான தோ்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT