தமிழ்நாடு

நுங்கம்பாக்கம்: மகளிர் சுய உதவிக் குழு கண்காட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் விற்பனை

21st Oct 2021 11:41 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருள்களின் நவராத்திரி மற்றும் தீபாவளி - 2021 சிறப்பு விற்பனை கண்காட்சியில்  25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகியுள்ளன.

சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருள்கள் நவராத்திரி மற்றும் தீபாவளி -2021 சிறப்பு விற்பனைக் கண்காட்சியினை 01.10.2021 அன்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கேஆர். பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

2021 அக்டோபர் 31ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், அமைக்கப்பட்டுள்ள 55 விற்பனை அரங்குகளில், சுமார் 122 மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களான பல்வேறு உலோகங்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், தரமான வீட்டு உபயோகப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், வாசனைப் பொருட்கள், மரச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், மூலிகைப் பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

குறிப்பாக தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பருத்தி, பட்டு ஆகியவற்றிலான ஆடை வகைகளும், குழயதைகள் முதல் பெரியவர்கள் வரை அணிந்து  மகிழும் வண்ணம் ஆயத்த ஆடைகளும், தரமான துண்டுகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென 6 தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 61 அரங்குகள் இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியின் துவக்க நாளான 01.10.2021 முதல் 19.10.2021 வரை ரூபாய் 25 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2021 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், கரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது அரசின் உரிய வழிகாட்டி நெறிமுறைகளான தடுப்பூசி செலுத்தப்பட்டிருத்தல், முக கவசம் அணிதல், அடிக்கடி கைக்கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இத்தகைய சிறப்பு மிக்க விற்பனைக் கண்காட்சியை அனைவரும் கண்டு களித்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்குமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ம. பல்லவி பல்தேவ் கேட்டுக் கொண்டார்.

Tags : chennai nungambakkam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT