தமிழ்நாடு

திருப்பூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோரக்கடைகள் அகற்றம்

19th Oct 2021 11:14 AM

ADVERTISEMENT

 

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் தென்னம்பாளையம் உழவர்சந்தை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டு வந்த சாலையோரக் கடைகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையம் உழவர் சந்தையில் 120 கடைகள் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கு வியாபாரம் செய்ய பதிவு செய்துள்ளனர். ஆனால் சமீபகாலமாக உழவர் சந்தைக்கு வெளியில்  சாலையோரத்திலும் வியாபாரிகள் காய்கறி கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர்.

இதன்காரணமாக விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், சாலையோரக் கடைகளால் தென்னம்பாளையம் பகுதியில் அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசலும் இருந்து வந்தது. எனவே சாலையோரக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த நிலையில், தென்னம்பாளையம் உழவர் சந்தை பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

ADVERTISEMENT

அப்போது சாலையோரங்களில் செயல்பட்டு வந்த 50க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும், மாநகராட்சி உத்தரவை மீறி சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைத்தால் காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். 

இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : திருப்பூர் பல்லடம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT