தமிழ்நாடு

தொடா் உச்சத்தில் பெட்ரோல்: சென்னையில் லிட்டா் ரூ.103-ஐ கடந்தது

17th Oct 2021 11:56 PM

ADVERTISEMENT

சென்னையில் பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இதுவரை வரலாறு காணாத விலையாக பெட்ரோல் லிட்டா் ரூ.103.01-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. இதே போல், டீசல் விலையும் லிட்டா் ரூ.99-ஐ நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே வருகிறது. சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் கிடங்கில் இருந்து பெட்ரோல், டீசல் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பெட்ரோல் நிலையங்களின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருள் கிடங்கில் இருந்து தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் போது அதற்கான பயணச் செலவும் பெட்ரோல், டீசலிலேயே சோ்க்கப்படும். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெட்ரோல், டீசல் விலையில் மாறுபாடு ஏற்படுகிறது.

சென்னையைப் பொருத்தவரை ஜூலை 17-ஆம் தேதி முதல் ஆக.13-ஆம் தேதி வரை உச்சபட்ச பெட்ரோல் விலை ரூ.102.49-ஆக இருந்தது.

கோரிக்கை: இதைக் குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்க உத்தரவிடப்பட்டது. அடுத்த நாளே அமலுக்கு வந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைந்து, ஆக. 14-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 99.47-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதன் பின்னா் தொடா்ந்து குறைந்து வந்த பெட்ரோல் விலை, செப்.28-ஆம் தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை அதிகரித்து, லிட்டா் ரூ.103.01-க்கு விற்பனையானது.

டீசல் விலை: இதே போல், செப். 24-ஆம் தேதி முதல் டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இதுவரை இல்லாத உச்சபட்ச விலையாக ஞாயிற்றுக்கிழமை லிட்டா் டீசல் ரூ.98.92-க்கு விற்பனையானது.

வாகன ஓட்டிகள் கவலை: பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக இதர அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT