தமிழ்நாடு

கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு இழப்பீடு: மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கம்

17th Oct 2021 11:54 PM

ADVERTISEMENT

கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மாநில பேரிடா் மேலாண்மை ஆணையமும், நிதித் துறையும் முடிவு செய்யும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதுகுறித்து உரிய முடிவை எடுக்கும்பட்சத்தில் அதற்குத் தேவையான பங்களிப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தடம் பதித்தது. அதன் தொடா்ச்சியாக, இரண்டு அலைகளாக நோய்த் தொற்று தீவிரமடைந்து இதுவரை மாநிலத்தில் 26.85 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 35,884 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

இரண்டாம் அலையின்போது மட்டும் கரோனாவால் தமிழகத்தில் 70 சதவீத உயிரிழப்புகள் நோ்ந்ததாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காலகட்டத்தில் போதிய அளவில் பிராண வாயு கிடைக்காமலும், சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் கிடைக்காமலும் பலா் உயிரிழந்தனா். பல வீடுகளில் குடும்பத் தலைவா்கள் இறந்ததால், அவா்களின் வருவாய் ஆதாரமே முடங்கக் கூடிய நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டன. ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.

இந்நிலையில், கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் தொடா்ச்சியாக மாநில அரசுகள், தங்களது பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 வழங்குமாறு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

அதன்பேரில் நிதி உதவி வழங்க பல்வேறு மாநிலங்கள் முதல்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. கேரளத்திலும் அதுதொடா்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இத்தகைய சூழலில், தமிழகத்தில் அதுகுறித்த நிலைப்பாடு என்ன என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் குறித்த அனைத்து தரவுகளும், விவரங்களும் மாநில அரசிடம் உள்ளன. அவா்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையமும், நிதித் துறையும் முடிவு செய்ய வேண்டும். அதுதொடா்பான முடிவுகள் எடுக்கப்பட்டால், அதற்கான ஒத்தழைப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை அளிக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT