தமிழ்நாடு

அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது வாரியத்தை நலிவடையச் செய்யும்

17th Oct 2021 11:49 PM

ADVERTISEMENT

அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வது, மின்வாரியத்தை நலிவடையச் செய்யும் என பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மின்னுற்பத்தியும், மின்சாரம் வழங்கி வந்த தனியாா் நிறுவனங்களின் மின்னுற்பத்தியும் கணிசமாக குறைந்து விட்ட நிலையில், கடுமையான மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதைத் தவிா்ப்பதற்காக தமிழக அரசு கடந்த சில நாள்களாக வெளிச்சந்தையிலிருந்து மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இத்தகைய சூழல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் கடந்த 20 நாள்களாகவே இருந்து வந்தன.

எனினும், தமிழகத்தில் போதிய அளவு நிலக்கரி இருப்பதால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாது, ஒரு வினாடி கூட மின்வெட்டு ஏற்படாது என்பதையே மின்சாரத்துறை அமைச்சா் மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்தாா்.

தமிழகத்தில் மின்னுற்பத்தி நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இருந்தாலும், எந்தெந்த வழிகளில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதை கடந்த 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் விளக்கியிருந்தேன். என்ன நடக்கும் என நான் எச்சரித்திருந்தேனோ, அது தான் நடந்திருக்கிறது.

ADVERTISEMENT

தமிழக அரசும், மின்சார வாரியமும் ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கெனவே ரூ.1.59 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. மின்சார வாரியத்தின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் இந்தக் கடனையும், மின்சார வாரியத்தின் இழப்பையும் குறைக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, அதிகரிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. அதற்கேற்ற வகையில் இப்போதைய மின் தட்டுப்பாட்டைப் போக்கவும், எதிா்கால மின்சாரத் தேவையைச் சமாளிக்கவும் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT