தமிழ்நாடு

கொளத்தூரில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வி.க நகர் மண்டலம், கொளத்தூர் பள்ளி சாலையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களின் உயிர்காக்கும் உன்னதத் திட்டமான கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
ஏழை எளியோருக்கான இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைத் திட்டமான கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்திடும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 385 வட்டாரங்களிலும் ஒரு வட்டாரத்திற்கு மூன்று முகாம் வீதம் மொத்தம் ஒரு வருடத்திற்கு 1,155 முகாம்களும், நகர்ப்புறங்களில் ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம் வீதம் ஒரு வருடத்திற்கு 80 முகாம்களும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும் நடத்த திட்டமிட்டு முதல்வரால் கடந்த 29ஆம் தேதி சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தொடங்கி வைக்கப்பட்டது.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்களின் மூலம் பொது மக்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் போன்ற 17 வகையான சிறப்பு மருத்துவர்களால் நோயை கண்டறிந்து அதற்கான முதல் சிகிச்சைகளும் அளிக்கப்படும். இம்முகாம்கள் மூலம், மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு
அருகாமையிலேயே நோய்க்கான ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கான ஆலோசனைகளை பெற இயலும்.

முதல்வரால் இன்று கொளத்தூர், சென்னை மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்ட வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில், பில்ராத் மருத்துவமனையின் சார்பில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை முறைகள், ஆர்பிஎஸ் மருத்துவமனையின் சார்பில் குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைகள், முருகன் மருத்துவமனையின் சார்பில் நரம்பு மற்றும் எலும்பு சார்ந்த சிகிச்சைகள், போர்டிஸ் மலர் மருத்துவமனையின் சார்பில் இருதய சிகிச்சைகள், வாசன் கண் மருத்துவமனையின் சார்பில் கண் பரிசோதனைகள் மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்குதல், சென்னை பல் மருத்துவமனையின் சார்பில் பல் தொடர்பான சிகிச்சைகள், MERF மருத்துவமனையின் மூலம் காது- மூக்கு-தொண்டை குறித்த சிகிச்சைகள், HYCARE மருத்துவமனையின் மூலம் சர்க்கரை மற்றும் சிறுநீரகம் தொடர்பான சிகிச்சைகள், சீடிஎச் மருத்துவமனையின் சார்பில் மனநலம் சார்ந்த சிகிச்சைகள், காசநோய் தொடர்பான சிகிச்சைகள், ஆயுஸ் மருத்துவர்கள் மூலம் சித்த மருத்துவ சிகிச்சைகள் ஆகிய சிகிச்சை முறைகள் குறித்த கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இம்முகாமில் 35 மருத்துவர்கள், 60 செவிலியர்கள், 3 மருந்தாளுநர்கள், 20 மருத்துவ ஊழியர்கள் மற்றும் 4 தொழில்நுட்ப வல்லுநர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இம்முகாம் மூலம் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT