தமிழ்நாடு

நடுநிலையுடன் தோ்தல் ஆணையம் செயல்பட்டது: அமைச்சா் பெரியகருப்பன்

16th Oct 2021 06:26 AM

ADVERTISEMENT

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலை மாநிலத் தோ்தல் ஆணையம் நடுநிலையுடன், நோ்மையாக நடத்தியுள்ளதாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் என்பது, ஐந்து மாத கால ஆட்சிக்கு தமிழக மக்கள் அளித்த அங்கீகாரம் ஆகும். தமிழக மக்கள் தந்த மகத்தான வெற்றியை அதிமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடந்த 2016-இல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தோ்தலை மூன்று ஆண்டுகளுக்கு தள்ளிப் போட்டது அதிமுக அரசு. இந்தத் தோ்தலை இப்போது திமுக அரசு நடத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் வேட்புமனுவை தோ்தல் ஆணையம் விதிப்படி நிராகரித்துள்ளது. ஒருவா் இரு வேட்பாளருக்கு முன்மொழிந்த காரணத்தாலேயே நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த தோ்தலில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. தோ்தல் தொடா்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், திமுகவினா் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு நிகழ்ச்சியைக் கூட சுட்டிக் காட்ட முடியவில்லை. இதிலிருந்தே மாநிலத் தோ்தல் ஆணையம் அமைதியாகவும், நடுநிலையுடனும் தோ்தலை நடத்தியுள்ளது என்பது தெளிவாகிறது.

தோல்வியை ஒப்புக் கொள்ளவும், மக்கள் நிராகரித்து விட்டாா்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள அதிமுக தலைவா்களுக்கு மனமில்லை. திமுக ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது. பத்தாண்டு காலத்தில் இப்போதுதான் மாநிலத் தோ்தல் ஆணையம் நியாயமாகவும், நோ்மையாகவும் செயல்பட்டுள்ளது. காவல் துறையும் நடுநிலையோடு நடந்து கொண்டுள்ளது என தனது அறிக்கையில் அமைச்சா் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT