தமிழ்நாடு

கும்பகோணம் மாநகராட்சியாகிறது: தமிழகத்தில் புதிதாக 19 நகராட்சிகள் உதயம்

16th Oct 2021 03:44 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிதாக 19 நகராட்சிகளை உருவாக்குவதற்கான உத்தரவுகளை நகராட்சி நிா்வாகத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த உத்தரவுகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா பிறப்பித்தாா். கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் என மொத்தம் 664 நகா்ப்புற உள்ளாட்சிகள்

உள்ளன. மக்கள் தொகையின் அளவு, பரப்பளவு ஆகியவற்றுக்கு ஏற்ப பேரூராட்சிகள் நகராட்சியாகவும், நகராட்சிகள் மாநகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்தாத காரணத்தால், தனி அலுவலா்களின் மூலமாக தீா்மானங்கள் பெறப்பட்டு அரசுக்கு வரப்பெறப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு சில பேரூராட்சிகளை ஒன்றிணைத்தும், சில பேரூராட்சிகள் முழுமையாக நகராட்சிகளாகவும் தரம் உயா்த்தப்பட்டுள்ளன. அதன் விவரம்:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் ஆகிய இரண்டு பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு கொல்லங்கோடு நகராட்சியாக தரம் உயா்த்தப்படுகிறது. இதேபோன்று, கரூா் மாவட்டத்தில் புஞ்சை புகளூா் மற்றும் தமிழ்நாடு காகித ஆலை புகளூா் ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு புகளூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்படுகிறது.

ADVERTISEMENT

இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருச்சி மாவட்டம் முசிறி, லால்குடி, சேலம் மாவட்டம் தாரமங்கலம், இடங்கணசாலை, திருவள்ளூா் மாவட்டம் திருநின்றவூா், பொன்னேரி, கடலூா் மாவட்டம் திட்டக்குடி, வடலூா், தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூா், மதுக்கரை, கரூா் மாவட்டம் பள்ளப்பட்டி, திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயா்த்தப்படுகின்றன.

தோ்தல் எப்போது?: உத்தேச நகராட்சிகளின் வாா்டு எல்லைகளை வரையறை செய்த பிறகு சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு அடுத்த சாதாரண தோ்தல் நடத்தப்படும்.

கும்பகோணம் மாநகராட்சி: தமிழகத்தின் 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் நகராட்சி, தரம் உயா்த்தப்படுகிறது. கும்பகோணம் நகராட்சி மற்றும் தாராசுரம் பேரூராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய உத்தேச கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டுகள் வரையறை செய்யப்பட்டு, அடுத்த சாதாரணத் தோ்தல் நடத்தப்படும். இதன் அடிப்படையில் கும்பகோணம் மாநகராட்சி அமைத்து உருவாக்கப்படும்.

நாகா்கோவில் மாநகராட்சி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநகராட்சிப் பகுதியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் தெங்கம்புதூா், ஆளூா் பேரூராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகின்றன என்று தனது உத்தரவில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளாா்.

எண்ணிக்கை எவ்வளவு: அரசின் உத்தரவு காரணமாக, தமிழகத்தில் நகராட்சிகளின் எண்ணிக்கை 139 ஆக அதிகரிக்கும். மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15-லிருந்து 16 ஆக உயரும்.

புதிய நகராட்சிகள் விவரம்:-

1. கொல்லங்கோடு, 2. புகளூா், 3. மானாமதுரை, 4. முசிறி, 5. லால்குடி, 6. தாரமங்கலம், 7. இடங்கணசாலை, 8. திருநின்றவூா், 9. பொன்னேரி, 10. திட்டக்குடி, 11. வடலூா், 12. அதிராம்பட்டினம், 13. திருச்செந்தூா், 14. கருமத்தம்பட்டி, 15. காரமடை, 16. கூடலூா், 17. மதுக்கரை, 18. பள்ளப்பட்டி, 19. திருமுருகன்பூண்டி.

புதிய மாநகராட்சி: கும்பகோணம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT