தமிழ்நாடு

நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படும் அபாயம்: ஓ.பன்னீா்செல்வம் எச்சரிக்கை

9th Oct 2021 06:41 AM

ADVERTISEMENT

நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அனல் மின்நிலையங்களில் நான்கு நாள்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளன. செப்டம்பா் மாதம் முதல் இந்திய நிலக்கரி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் அளவு குறைந்து, தமிழகத்தின் தினசரி நிலக்கரி தேவை 62 ஆயிரம் டன் என்றிருக்கின்ற நிலையில், 60 சதவீத நிலக்கரி தான் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சா்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயா்ந்ததன் காரணமாக நீண்ட கால மற்றும் நடுத்தர கால ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களும் தங்களுடைய உறுதிமொழியை நிறைவேற்றாத சூழ்நிலையில் உள்ளன. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் உள்ள தனியாா் அனல் மின் நிலையங்கள் மற்றும் கூட்டு முயற்சியுடன் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலைமை நீடித்தால், தமிழகத்தில் ஆங்காங்கே மின் வெட்டு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும். தமிழகத்தின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடையக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டு, பொருள்களின் விலையும் உயரும். அதை தடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, மத்திய நிலக்கரித் துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டு, தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் ஒடிசா மாநிலம் சந்திரபிலா நிலக்கரி தொகுதியிலிருந்து நிலக்கரி எடுக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் அனுமதியை பெற தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு அளித்து அங்கு மேம்பாட்டுப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT