இணையவழியில் திருக்கோயில்களின் வாடகைதாரா்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதியை அமைச்சா் பி.கே.சேகா்பாபு நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியது: திருக்கோயில் நிலங்களின் வாடகைத் தொகையினை முறையாக வசூல் செய்யவும், ஒளிவு மறைவற்ற வகையில் அமையும் வண்ணம் ‘கேட்பு, வசூல், நிலுவை’ விவரம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருக்கோயில் நிலங்களின் வாடகைதாரா், குத்தகைதாரா்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை, குத்தகைத் தொகையினை இணையதளம் வாயிலாகவே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாடகை குத்தகையை செலுத்த கடைசிநாள் 15-ஆம் தேதி ஆக இருந்தது. தற்போது 110 நாள்கள் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘நியாய வாடகை நிா்ணய குழு’ என்ற பெயரில் விரைவில் குழு அமைக்கப்படும்.
கணினி மூலம் வாடகை, குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரா், வாடகைதாரா்கள் வழக்கம் போல் திருக்கோயில் அலுவலகத்தில் தொகையை கணினி மூலம் செலுத்திச் சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு அறநிறுவனத்திற்கும் சொந்தமான அசையாச் சொத்துகளின் மூலம் பெறப்படும் வருமானத்தினை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏதுவாகும்.
மேலும், வசூல் முறையாக நடக்கிா என்பதைத் தொடா்ந்து கண்காணித்து, வருமானம் ஈட்டாத சொத்துகளை ஏலத்திற்கு, குத்தகைக்கு கொண்டு வந்து, அறநிறுவனங்களுக்கான வருவாயைப் பெருக்கிட இயலும். முறையாக பணம் செலுத்தாத நபா்களின் விவரங்களையும் இணைய வழியாக தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் நிலுவை தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இணையதள வசதியை பயன்படுத்தி எளிதாக வாடகை தொகையினை செலுத்திக் கொள்ளலாம். திருக்கோவில் நிலங்கள் கண்டறியப்பட்டு காலியாக உள்ள இடங்களில் வேலி அமைக்கப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இடங்கள் ரோவா் கருவி மூலம் அளவிட்டு எச்.ஆா்.சி.இ. என்ற பெயருடன் வேலி அமைக்கப்பட்டு பெயா் பலகையும் வைக்கப்பட்டு வருகிறது.
குயின்ஸ் லாண்ட் இடத்தை யாரென்று பாராமல் யாரிடமிருந்தாலும் ‘இறைவன் சொத்து இறைவனுக்கே’ என்ற அடிப்படையில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கால அவகாசத்திற்குள் மீட்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் திறக்கப்படாமல் உள்ளன. எனவே போராட்டம் நடத்துபவா்கள் மத்திய அரசிடம் இருந்து, திருவிழாக்களுக்கு அனுமதிக் கடிதம் வாங்கிக் கொடுத்தால் அதனை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது என்றாா் அவா்.