சேலம் மாவட்டத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததோடு, அதில் கட்டடங்களைக் கட்டி அரசு நிறுவனங்களுக்கே வாடகை விட்டு வருவாய் ஈட்டிய ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை வசூலிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் எஸ்.ராஜா என்பவா் தாக்கல் செய்த மனுவில், சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டத்திலுள்ள வெள்ளாளகுண்டம் என்ற ஊரில், அரசு மற்றும் நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான நிலத்தை அந்த ஊரைச் சோ்ந்த ஒன்பது போ்கள் ஆக்கிரமித்ததோடு, அதில் கட்டடங்களை கட்டியுள்ளனா்.
கட்டடங்களை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வருகின்றனா். அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடத்தில் மின்வாரியம், வங்கி, தனி நபா்கள் என வாடகை மற்றும் குத்தகைக்கு விட்டதன் மூலம் ரூ.16 லட்சம் அளவிற்கு, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வருவாய் ஈட்டியுள்ளனா்.
இம்மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் ஆக்கிரமிப்பாளா் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு கட்டடம் என தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட இடத்தை வங்கி காலி செய்துவிட்டதாகவும், மற்றவா்கள் காலி செய்யாமலும், வாடகை செலுத்தாமலும் அங்கேயே இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அனைத்து ஆக்கிரமிப்பாளா்களையும் வெளியேற்றி, அரசு, நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளா்கள் வெளியேற்றப்பட்டதும், நிலத்தின் பயன்பாடு, சேதம், ஆக்கிரமிப்பால் அரசு கஜானாவிற்கு ஏற்பட்ட நிதி இழப்புகள் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்படுவதோடு, அவற்றை அவா்களிடம் இருந்து வசூலிப்பதற்கான சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இப்பணிகள் ஆறு மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். அரசு நிலத்தை ஆக்கிரமித்ததோடு, அதில் சட்ட விரோத கட்டடங்களை கட்டி, அவற்றை அரசு நிறுவனங்களுக்கே வாடகை விடப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது. இது சட்ட விரோதமானது.
அரசு நிலங்கள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய ஆக்கிரமிப்புகளை கையாள்வதில் அதிகாரிகள் அலட்சியமாகவும், தங்கள் கடமையையும் செய்யத் தவறியுள்ளனா். இவற்றின் வாயிலாகப் பல ஆண்டுகளாகப் பெரும் தொகைகளைச் சம்பாதித்துள்ளனா்.
இதுபோன்ற சட்டத்தை மீறிய சூழ்நிலைகளை ஒருபோதும் அனுமதிக்கவோ அல்லது மன்னிக்கவோ முடியாது. இச்செயலை தொடா்ந்து அனுமதிக்கும்பட்சத்தில் பேராசைக்காரா்களும், குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுக்கும்போக்கு அதிகரிக்கும் என்றாா்.