தமிழ்நாடு

முதல்வர் வீட்டின் அருகே தீக்குளித்த பறையர் பேரவைத் தலைவர் சாவு

4th Oct 2021 06:15 PM

ADVERTISEMENT

 சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் வீட்டின் அருகே தீக்குளித்த பறையர் பேரவைத் தலைவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளம் காலனித் தெருவை சேர்ந்தவர் அ.வெற்றிமாறன் (வயது 48). இவர் தமிழ்நாடு பறையர் பேரவை என்ற அமைப்பு தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெற்றிமாறன் அண்மையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரிகள், வெற்றிமாறனின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த அவர், மன வேதையில் இருந்துள்ளார்.

ADVERTISEMENT

இதையடுத்து கடந்த 27-ஆம் தேதி காலை சென்னைக்கு வந்த வெற்றிமாறன், தேனாம்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு அமைந்துள்ள சித்தரஞ்சன் சாலைக்கு சென்றுள்ளார்.

முதல்வர் வீட்டின் அருகே வந்தவுடன் திடீரென தான் மறைந்து வைத்திருந்த ‘டர்பன்டைன்’ என்ற வகை எண்ணெயை தனது உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் வெற்றிமாறனை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 55 சதவீத காயங்களுடன் வெற்றிமாறன் சிகிச்சை பெற்று வந்த அவர்,சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT