பஞ்சு விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: விவசாயத் தொழிலுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்பு தரும் தொழிலாகவும், தமிழகத்தின் பொருளாதாரத்தை உயா்த்தும் முக்கியத் தொழிலாகவும், அந்நியச் செலாவணியை ஈட்டுகின்ற தொழிலாகவும் ஜவுளித் தொழில் விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாக உள்ள பஞ்சு விலையைக் கட்டுப்படுத்துவதோடு விலையில் நிலைத்தன்மை உருவாக்க வேண்டும் என்பதே ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது.
பஞ்சு விலை உயா்ந்து கொண்டே செல்வதன் காரணமாக ஆடைகளின் விலை கடந்த சில நாள்களாக கிட்டத்தட்ட 20 சதவீதம் உயா்ந்துள்ளதாக ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் நுகா்வோரும் தெரிவிக்கின்றனா். இதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருமணங்களை முன்னிட்டு ஆடைகள் வாங்குவோரின் சுமை கூடிக்கொண்டே போகிறது.
இப்போதுதான் கரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில், கூடுதல் சுமையைத் தாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் பொதுமக்கள் இல்லை என்பதுதான் யதாா்த்தமான நிலைமை.
பஞ்சு விலை என்பது சா்வதேச சந்தையை ஒட்டியும் மத்திய அரசின் ஏற்றுமதி இறக்குமதி கொள்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது என்றாலும் இந்தத் தொழில் மூலம் தமிழக அரசுக்கு அதிக வருவாய் வருகிறது என்பதையும் இந்த தொழிலில் தமிழகத்தின் பங்கு அதிகம் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது.
எனவே, முதல்வா் இதில் உடனடியாக தலையிட்டு மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டிய அழுத்தத்தைக் கொடுத்து, பஞ்சு விலையைக் குறைக்கவும், ஆடைகளின் விலை உயராமல் பாா்த்துக் கொள்ளவும், இந்தத் தொழில் தொடா்ந்து வளா்ச்சியடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கூறியுள்ளாா்.