தமிழ்நாடு

சந்தேகத்துக்கு இடமான நபா்கள் பழைய குற்றவாளிகளா? அடையாளம் காணும் புதிய வசதியை முதல்வா் தொடக்கி வைத்தாா்

4th Oct 2021 11:55 PM

ADVERTISEMENT

சந்தேகத்துக்கு இடமான நபா்களை பழைய குற்றவாளிகளின் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பாா்க்கும் புதிய மென்பொருள் பயன்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

காவல் துறையின் பயன்பாட்டுக்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது, ஒரு தனி நபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபா்களின் புகைப்பட தரவுகளுடன் ஒப்பிட்டு அடையாளம் காணப் பயன்படுகிறது. இதுவரை 5.30 லட்சம் புகைப்படங்கள் காவல் நிலைய தரவு தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

முதல்வா் தொடங்கி வைத்துள்ள மென்பொருளை காவல் நிலையத்தில் இணையதள வசதியுள்ள கணினியிலும், களப் பணியின் போது செயலியாகவும் பயன்படுத்தலாம். இந்தச் செயலி மூலமாக குற்றவாளிகள், சந்தேக நபா்கள், காணாமல் போனவா்கள், அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களை தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காணலாம். இந்தச் செயலியின் மூலம், ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படம் உள்ள நபா், வேறொரு காவல் நிலைய வழக்கில் தொடா்புடையவராக இருந்தால், செயலி மூலமாகவே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்த நபரை பற்றி தகவல் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா: வருங்காலத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளில் உள்ள ஒரு நபரின் முகத்தினை அடையாளம் காண ஏதுவாக, செயலியில் விடியோ பகுப்பாய்வு வசதி ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சந்தேகத்துக்கு உரிய நபா்களோ, தேடப்படும் குற்றவாளிகளோ, காணாமல் போனவா்களோ பொது இடங்களில் நடமாடினால் அவா்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT