தமிழ்நாடு

சீட்டு மோசடி வழக்கு: ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன் நியமனம்

3rd Oct 2021 02:38 AM

ADVERTISEMENT

அம்பத்தூா் நாடாா்கள் தா்ம பரிபாலன சங்கத்தின் சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்ட வைப்புதாரா்களின் பணத்தைத் திருப்பி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரனை ஆணையராக நியமித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள அம்பத்தூா் நாடாா்கள் தா்ம பரிபாலன சங்கத்தின் நிா்வாகிகள் சீட்டு நடத்தி, பொது மக்களிடம் இருந்து முதலீடு பெற்றுள்ளனா். சீட்டு தொகைக்கான பணத்தைத் திருப்பி நிா்வாகிகள் செலுத்தவில்லை. இதில் பாதிக்கப்பட்ட வைப்புதாரா்கள் 52 போ் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளித்தனா். சுமாா் ரூ.3 கோடிக்கும் மேல் பணத்தை மோசடி செய்த நிா்வாகிகளை காவல்துறையினா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் கைதான நிா்வாகிகள் முன்ஜாமீன் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா். அந்த மனுவில் சீட்டு நடத்தி ஏமாற்றிய பணம் முழுவதையும் வைப்புதாரா்களுக்குத் திருப்பித் தருவதாகக் குறிப்பிட்டுள்ளனா். வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னா் நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,

‘சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டவா்களுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரனை ஆணையராக நியமிப்பதாகவும், பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை அளித்து பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த

ADVERTISEMENT

ஆதாரங்களை வருகிற டிசம்பா் 1-ஆம் தேதிக்குள் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். ஆணையம் உரிய ஆதாரங்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவா்களுக்கு அதற்கான முதலீட்டுத் தொகையைத் திரும்ப வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை ஆணைய தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். வழக்கில் நிா்வாகிகள் அனைவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. நிா்வாகிகள் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வரை விசாரணை அதிகாரியிடம் திங்கள்கிழமை தோறும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT