அரசியல் ஆதாயங்களுக்காக வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்ற அனுமானம் என பாமக நிறுவனா் ராமதாஸ் பதில் மனுவில் தெரிவித்துள்ளாா்.
சென்னை உயா் நீதிமன்றத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி
நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிா்த்து மனுக்கள், பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களுக்கு
பதிலளித்து பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் போட்டியிட முடியவில்லை என கடந்த 1989ஆம் ஆண்டுகளில் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் வன்னியா்கள் உள்ளிட்ட 106 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா் மரபினா் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் ஆணையத் தலைவரின் அறிக்கையின் அடிப்படையில் மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் வன்னியா்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீா்மரபினா் மற்றும் பிற பிரிவினருக்கு முறையே 7 மற்றும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
வன்னியா்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தோ்தலில் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாகக் கூறுவது தவறு; இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்ற அனுமானத்தின் விளைவாகும்.
முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்தப் புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. வன்னியா் சாதியினருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், வன்னிய குல சத்திரியா் பிரிவில் ஏழு சாதியினா்
உள்ளனா். வன்னியா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆய்வு செய்ய நீதிபதி குலசேகரன் கமிட்டி அமைக்கப்படவில்லை எனவும், தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யலாமா, வேண்டாமா என்பதை ஆய்வு செய்யவே அமைக்கப்பட்டுள்ளது. வன்னியா் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.